புதுடில்லி: “”அமெரிக்காவில் கைதான பயங்கரவாதிகளில் ஒருவனான தகாவுர் ரகுமான் ராணாவுக்கும், அவனது மனைவி எனக் கூறிக் கொண்டு இந்தியா வந்த பெண்ணுக்கும் விதிமுறைகளை மீறி, இந்திய தூதரகம் விசா வழங்கியது குறித்து விசாரிக்கப்படும்.
உள்துறை அமைச்சக ஒப்புதல் இல்லாமல் செயல் பட்ட இந்த விவகாரம் குறித்து கவனமாகப் பரிசீலிக்கப்படும்,” என வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
லஷ்கர் – இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலின் பேரில், இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய டேவிட் ஹெட்லி என்ற அமெரிக்கரையும், அவனது கூட்டாளியான தகாவுர் ரகுமான் ராணா என்பவனையும், அமெரிக்காவின் பெடரல் புலனாய்வு நிறுவன அதிகாரிகள் கைது செய்தனர். ஹெட்லியும், ராணாவும் பல முறை இந்தியாவுக்கு வந்து சென்றதும் தெரியவந்தது.இந்நிலையில், ராணா மட்டுமின்றி, அவனுடன் சாம்ராஸ் ராணா அக்தர் என்ற பெண்ணும் இந்தியாவுக்கு வந்து சென்றதாகவும், அவர்கள் இருவருக்கும் விசா விதிமுறைகளை மீறி, அடிக்கடி இந்தியா சென்று வரும் வகையில் சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்கியதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா இதுதொடர்பாக கூறியதாவது:ராணாவுக்கு விசா வழங்கியதில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் செயல்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தூதரக அதிகாரியின் உத்தரவின் பேரில், ராணாவும், அவனது மனைவி என தெரிவிக்கப்பட்டுள்ள சாம்ராஸ் என்ற பெண்ணும் அடிக்கடி இந்தியா வந்து செல்ல விசா வழங்கப்பட்டுள்ளது. ராணாவும், சாம்ராசும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள். பாகிஸ்தானில் பிறந்தவர்களுக்கு விசா வழங்க வேண்டும் எனில், அதற்கு உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும். மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விசா வழங்க முடியும். இந்த விஷயத்தில் விசா விதிமுறைகளை மீறி, சிகாகோவில் உள்ள தூதரகம் செயல்பட்டுள்ளது.பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட இந்த விவகாரம் குறித்து கவனமாகப் பரிசீலிக்கப்படும். விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்தார்.
ஆசிரமத்தில் ஹெட்லி: இதற்கிடையில், 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில், புனேயில் உள்ள ஓஷோவின் ஆசிரமத்திற்கும் ஹெட்லி இருமுறை விஜயம் செய்துள்ளான். தியானம் செய்வதற்காக கோரேகான் பார்க் பகுதியில் செய்யப் பட்டுள்ள வசதிகளை அவன் பார்வையிட்டதாகவும், ஆசிரம நிர்வாகிகள் கூறியுள்ளனர். விசாரணைக்கு, ஓஷோஆசிரம நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
Leave a Reply