ஸ்ஸ்… அப்பாடா! நிம்மதிப் பெருமூச்சில் ஐடி நிறுவனங்கள்!

03-it-firm200இந்திய ஐடி நிறுவனங்கள் சற்றே நிம்மதிப்பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளன. காரணம், ‘இப்போ முடியுமா… இன்னும் நாளாகுமா’ என இழுத்துக் கொண்டே இருந்த அமெரிக்க பொருளாதார மந்த நிலை, மெல்ல மெல்ல மீட்சிக்குத் திரும்பிக் கொண்டிருப்பதுதான்.

யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சி 3.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதைப் பார்த்த பிறகுதான், அமெரிக்கப் பொருளாதாரம் சரியான திசையில்தான் போகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார் அவர்.

அமெரிக்காவின் பெரிய ஐடி நிறுவனங்கள், மீட்சி நிலையை உறுதிப்படுத்தியுள்ளன. 2010 மத்தியில் மீண்டும் வழக்கமான வளர்ச்சி நிலைக்குத் திரும்பிவிடும் என்றும் இந்த நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

கார்ட்னர் என்ற ஆராய்ச்சி நிறுவனம், “2010-ல் ஐடி நிறுவனங்களின் உற்பத்தி செலவு மட்டும் 3.3 ட்ரில்லியன் டாலராக இருக்கும். இது நடப்பு ஆண்டை விட 3.3 சதவிகிதம் அதிகம்” என்று குறிப்பிட்டுள்ளது.

2010-ல் நிறுவனங்கள் வளர்ச்சி நிலைக்குத் திரும்பினாலும், ஏற்கெனவே 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட நஷ்டத்தை அவை ஈடுகட்ட வேண்டியிருப்பதால், 2012-ல்தான் லாபம் பார்க்க முடியும் என்றும் இந்த கணிப்புகள் கூறுகின்றன.

ஆனால் இந்திய ஐடி துறையைப் பொறுத்தவரை அமெரிக்காவில் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தெரியத் துவங்கியபோதே, இங்கு சாதகமான நிலைமைகள் திரும்ப ஆரம்பித்துவிட்டன என்கிறார்கள்.

இன்போஸிஸ், டாடா கன்ஸல்டன்ஸி மற்றும் விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களின் நிகர லாப அளவு இந்த காலாண்டில் மகிழ்ச்சியளிப்பதாகவே இருந்தன. இதன் விளைவு, இம்மூன்று நிறுவனங்களுமே, முதலீட்டுச் செலவை அதிகரித்துவிட்டன. சம்பள உயர்வையும் அறிவித்துள்ளன.

விப்ரோ நிறுவனம்தான் அதிக நம்பிக்கை தெரிவித்துள்ளது வரும் காலாண்டின் வர்த்தகம் குறித்து. அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 2.5 முதல் 3 சதவிகித வருவாய் உயர்வு நிச்சயம் இருக்கும் என்கிறது விப்ரோ. இது உண்மையில் மிகப்பெரிய விஷயம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆனால் விப்ரோவின் இணை தலைமை நிர்வாகி சுரேஷ் வாஸ்வானி, “எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் பலம், விற்பனை போன்றவற்றின் அடிப்படையில் இந்த குறியீட்டளவை வெளிப்படுத்தியுள்ளோம். நிச்சயம் எங்களால் இதற்கு மேலும் சாதிக்க முடியும்” என்கிறார்.

நாட்டின் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ், தனது இந்த காலாண்டின் வருமானத்தில் 58 சதவிகித பங்கு அமெரிக்காவிலிருந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இன்னும் வருகிற நாட்களில் அமெரிக்காவில் நிலைமை முழுமையாக சீரடையும்போது இந்த அளவு நிச்சயம் அதிகரிக்கும் என்கிறது அந்த நிறுவனத்தின் அறிக்கை.

நாஸ்காம் தலைவர் சோம் மித்தல் கூறுகையில், “இந்த நிதியாண்டின் முதல் பாதி எந்த பெரிய மாறுதலும் இல்லாமல்தான் முடிந்திருக்கிறது. ஆனால் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டில் நல்ல மாறுதல் வரும். மேலும் இந்த காலகட்டம் நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது. தொழில்நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி தொழில் வளர்ச்சி காணவேண்டும்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *