2.1 கோடி சீன செல்போன் இன்றுடன் இணைப்பு ரத்து

பெங்களூர் : சர்வதேச மொபைல் அடையாள எண் (ஐஎம்இஐ) இல்லாத சுமார் 2.1 கோடி சீன செல்போன்களின் இணைப்பு இன்றிரவு 12 மணியுடன் ரத்தாகிறது. சர்வதேச அளவில் ஒவ்வொரு செல்போனையும் அடையாளம் காண வசதியாக ஐஎம்இஐ எண் தரப்படுகிறது.

விலை குறைவாக இருப்பதால் தரமற்ற சீனா, கொரியா செல்போன்களை நம்நாட்டில் கோடிக்கணக்கானோர் வாங்கி வந்தனர். ஐஎம்இஐ எண் இல்லாத இந்த செல்போன்கள் தொலைந்தாலோ, அதை வைத்திருப்பவர் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட புகார் மீதோ கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.

இத்தகைய போன்களின் இணைப்புகளை ரத்து செய்ய கடந்த செப்டம்பர் 3ம் தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது. ஐஎம்இஐ எண் இல்லாத போனை வாங்கிய அப்பாவிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய செல்போன் சேவை அளிப்போர் சங்கம் (எம்எஸ்ஏஐ) நவம்பர் 30 வரை (இன்று) அவகாசம் கேட்டது. அதற்கு தொலைத் தொடர்புத் துறை அனுமதி அளித்தது. ஐஎம்இஐ எண் இல்லாத போன்களை பதிவு செய்து கட்டணம் செலுத்தி புதிய எண் பெற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது இன்றுடன் முடிகிறது. ஐஎம்இஐ எண் இல்லாமல் சுமார் 3 கோடி செல்போன்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

இந்த அறிவிப்புக்கு பிறகும் 2.1 கோடி போன்களுக்கு புதிய எண் விண்ணப்பித்து பெறப்பட வில்லை என தெரிகிறது. எனினும், கடந்த சில நாட்களாக புதிய எண் பெற கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இன்றிரவு 12 மணிக்குப் பிறகு இந்த செல்போன் இணைப்புகள்
ரத்தாகும். போனை பயன்படுத்த முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *