காத்மாண்டு: நேபாளத்தின் பரியாபூர் மாவட்டத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விலங்குகள் பலியிடும் திருவிழா வருகிற 24ம் தேதி தொடங்குகிறது. இதில் ஐந்து லட்சம் விலங்குகளை மொத்தமாக பலி தரப் போகிறார்கள்.
ஆனால் இந்த விழாவைத் தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 நாட்களுக்கு இந்த விழா நடைபெறும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இது கொண்டாடப்படும். கடந்த 300 ஆண்டு காலமாக இந்த விழா நடந்து வருகிறதாம்.
நேபாளத்தின் தென் பகுதி எல்லையில் இந்த பரியபூர் கிராமம் அமைந்துள்ளது. இந்து பக்தர்கள் பெருமளவில் இந்த திருவிழாவுக்காக கூடுவார்கள்.
உலகிலேயே ஒரே இடத்தில் அதிக அளவிலான விலங்குகளைப் பலியிடும் நிகழ்ச்சி இதுதான் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு 25 ஆயிரம் எருமை மாடுகள், ஆயிரக்கணக்கான ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட 5 லட்சம் விலங்குகளைப் பலியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
கதிமாய் என்ற இந்து கடவுளுக்குப் படைப்பதற்காக இந்த பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறதாம். விலங்குளைப் பலியிட்டு கோரிக்கை வைத்தார் கதிமாய் அதை நிறைவேற்றுவாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
விழாவின் தொடக்கமாக முதலில் 2 காட்டு எலிகள், ஒரு பன்றி, ஒரு ஆடு மற்றும் குட்டி உள்ளிட்டவை வெட்டி பலி கொடுக்கப்படும். அதன் பின்னர் மற்ற விலங்குகளைப் பலியிட தொடங்குவார்கள்.
இந்த நிலையில் இந்த விழா மிகக் கொடூரமானது. இதை நிறுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இதற்கு கதிமாய் விழாவின் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 300 ஆண்டுகளாக இது நடைமுறையில் இருந்து வரும் விழா. இதை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த பழக்கத்தை விட்டு விட்டு கோவில் திருவிழாவை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்கிறார் கோவிலின் தலைமைப் பூசாரியான மங்கள் செளத்ரி தரு.
ஆனால் புத்தரின் மறு பிறவி என புத்தமதத்தினரால் பரவலாக நம்பப்படும் 17 வயது நேபாள சிறுவன் ராம் பகதூர் பாம்ஜனும், இந்த விலங்குகள் பலி கொடுக்கும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நடிகை பிரிஜிட் பர்டோட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் பர்டோட் இந்த பழக்கத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டுள்ளார். எனவே இந்த ஆண்டு விலங்குகள் பலி கொடுக்கும் நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படக் கூடும் என்ற அச்சம் விழா ஏற்பாட்டாளர்களிடம் நிலவுகிறது.
ஆனால் நேபாள பிரதமர் இதுவரை நிகழ்ச்சிக்கு தடை எதுவும் விதிக்கவில்லை என்பது அவர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
Leave a Reply