ராஞ்சி : தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆதரவாளர்களுக்கு பரிசாக வழங்க 600க்கும் மேற்பட்ட வாகனங்களை ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மதுகோடா ரூ.4,000 கோடிக்கு சொத்துக்கள் சேர்த்திருப்பதும் அவரும் அவரது நண்பர்களும் ரூ.2,000 கோடிக்கு ஹவாலா மோசடியில் ஈடுபட்டதும் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறையினர் சமீபத்தில் நடத்திய சோத னையில் கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ராஞ்சியில் தனது வீட்டில் தங்கியுள்ள மதுகோடாவிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று 2வது நாளாக விசாரணை நடத்தினர். கடந்த மக்களவை தேர்தலில் ஜார்கண்ட்டில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட மதுகோடா வெற்றி பெற்று எம்.பி. ஆனார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தனது ஆதரவாளர்களுக்கு லஞ்சமாக கொடுக்க 600 மோட்டார் பைக்குகள் மற்றும் ஸ்கார்பியோ, பொலிரோ ரகங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கார்களை மதுகோடா வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நாளில் ஒரு கடையில் இருந்து 200 பைக்குகள் வாங்கப்பட்டுள்ளன. எச்சரிக்கை: இதனிடையே, ராஞ்சியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகாத மதுகோடாவின் நண்பர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமானவரித் துறை எச்சரித்துள்ளது.
Leave a Reply