மும்பை: இலங்கை அணியுடனான 3வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 443 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. அதிரடி தொடக்க வீரர் சேவக் 284 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா & இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட், மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. டாசில் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 366 ரன் எடுத்திருந்தது. மேத்யூஸ் 86, முரளிதரன் (0) இருவரும் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். டெஸ்ட் போட்டிகளில் முதல் சதத்தை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேத்யூஸ் 99 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். வெலகெடரா 8 ரன் எடுத்து ஓஜா சுழலில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 393 ரன்னுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. சேவக் & எம்.விஜய் ஜோடி அதிரடியாக விளையாட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சேவக் 101 பந்தில் சதம் அடித்தார். சிறப்பாக விளையாடிய விஜய் 87 ரன் எடுத்து ஹெராத் சுழலில் எல்பிடபுள்யூ ஆனார். சேவக் & விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 221 ரன் சேர்த்து அசத்தியது. ‘பெருஞ்சுவர்’ டிராவிட் ஒரு முனையில் நிற்க, சேவக் தாண்டவம் ஆடினார்.அவரது மட்டையில் பந்து படுவது மட்டுமே இலங்கை வீரர்களுக்கு தெரிந்தது. அடுத்த விநாடியில் அதை எல்லைக் கோட்டுக்கு வெளியேதான் அவர்கள் தேட வேண்டி இருந்தது. பவுண்டரியும், சிக்சருமாய் பறக்க 36 ஆண்டுகளுக்குப் பிறகு பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடப்பது டெஸ்ட் போட்டிதானா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஏதோ டி10 போட்டியில் ஆடுவது மாதிரி சேவக் அநாயசமாக அடித்து அமர்க்களப்படுத்தினார்.
சேவக்கின் 2வது 100 ரன் 67 பந்துகளிலேயே கிடைத்துவிட்டது. தனது 6வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்த அவர், அதிரடிக்கு கொஞ்சம் கூட பிரேக் போடாமல் ஒரே மிதியாய் மிதிக்க இலங்கை பந்துவீச்சு மண்ணோடு மண்ணானது. அவர் கொடுத்த சில கடினமான கேட்ச் வாய்ப்புகளையும், ‘மந்திரித்த’ நிலையில் இருந்த இலங்கை வீரர்கள் கோட்டை விட்டனர்.
பிராட்மேன் ஒரே நாளில் 309 ரன் குவித்த சாதனை சேவக்கின் கதாயுதத்தில் இருந்து நூலிழையில் தப்பியது. காலையில் இலங்கை வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கு பேட் செய்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 443 ரன் குவித்துள்ளது. கைவசம் 9 விக்கெட் இருக்க, இந்தியா 50 ரன் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. சேவக் 284, டிராவிட் 62 ரன்னுடன் களத்தில் உள்ளனர். சேவக் இன்றும் தனது அதிரடியை தொடர்ந்தால் பல சாதனைகள் உடைந்து நொறுங்கும்
Leave a Reply