புதுடில்லி : அடுத்த ஐந்தாண்டில் உயர்நிலைப் பள்ளி கல்வியை அடிப்படை உரிமையாக்க, மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு, மத்திய அமைச்சர் கபில் சிபல் பேசியதாவது:ஆரம்பக் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் மசோதா, கடந்த பார்லிமென்ட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், ஆறு வயது முதல் 14 வயதுடைய சிறார்கள் இலவச கல்வி கற்க வழி செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில், உயர் நிலைக் கல்வியை அடிப்படை உரிமையாக்க, மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. 2013 அல்லது 2015ம் ஆண்டுக் குள், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்.கட்டாய ஆரம்ப கல்வித் திட்டம் 1.71 லட்சம் கோடி ரூபாய் செலவில் ஐந்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் அமல் படுத்தப்படும். இதன் மூலம் 16 கோடி சிறார்கள் பள்ளிக்குச் சென்று படிக்க வழி ஏற்படும். உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை, தற்போது 12.4 சதவீதமாக உள்ளது. வரும் 2020ம் ஆண்டில், இதை 30 சதவீதமாக உயர்த்த அரசு, இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்கை அடைந்து விட்டால், கூடுதலாக நான்கு கோடி மாணவர்கள் உயர் கல்வி கற்பார்கள்.நாடு முழுவதும், தற்போது 480 பல்கலைக் கழகங்களும், 22 ஆயிரம் கல்லூரிகளும் உள்ளன. ஆனால், நமக்கு இன்னும் 14 ஆயிரம் பொது கல்லூரிகளும், 12 ஆயிரத்து 775 தொழிற் கல்லூரிகளும், 269 பல்கலைக் கழகங்களும் கூடுதலாக தேவைப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஒரு கோடியே 30 லட்சம் பேர் வேலையில் சேருகிறார்கள். இவர்களில் முறையான தொழிற் கல்வி பெற்றவர்கள் 20 லட்சம் பேர் மட்டுமே.இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
Leave a Reply