சென்னை:”அனுமதியின்றி தமிழகம் முழுவதும் இயங்கும் பள்ளிகளை மூடுவதற்கு, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது’ என சென்னை ஐகோர்ட்டில் அரசு பிளீடர் தெரிவித்துள்ளார்.நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு கிராம ஊராட்சித் தலைவர் பழனியப்பன் என்பவர் தாக்கல் செய்த மனு:
கடந்த 3ம் தேதி வேதாரண்யம் அருகில் உள்ள கத்திரிபுலம் கிராமத்தில், பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்ததில், ஒன்பது மாணவ, மாணவியர், ஒரு ஆசிரியை பலியாகினர். வேன் டிரைவர் மகேந்திரன் மற்றும் உதவியாளர் சுப்ரமணியன் மீது, காரியாபட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில், கலைவாணி மகா மெட்ரிக் பள்ளியின் தாளாளரை சேர்க்கவில்லை.
பள்ளியின் தாளாளர் தான், வேனை வாடகைக்கு எடுத்துள்ளார். வேனில் ஏற்றி வருவதற்காக ஆசிரியை மற்றும் மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்துள்ளார். மே மாதம் 31ம் தேதியுடன் பள்ளிக்கு வழங்கப்பட்ட அனுமதி முடிந்து விட்டது எனக் கூறி, தற்போது அந்த பள்ளியை மூடுவதற்கு, நாகப்பட்டினம் தலைமை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அனுமதியின்றி எந்த பள்ளிகளும் இயங்கக் கூடாது என்பதற்கு அந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அனுமதியின்றி பள்ளி இயங்குவதற்கு அனுமதித்ததால், கல்வித்துறை அதிகாரிகள் தங்கள் கடமையில் இருந்து தவறியுள்ளனர். கடந்த 3ம் தேதி நடந்த சம்பவத்திற்கு பள்ளி தாளாளரும் பொறுப்பு. உதவித் தொகையை அரசு வழங்கினாலும், இந்த பள்ளியின் தாளாளரும் நஷ்டஈடு வழங்க வேண்டும்.வேன் டிரைவர், உரிய உரிமம் பெறவில்லை. இந்த விபத்தில் இருந்து, தமிழகத்தில் பல பள்ளிகள் உரிய அனுமதியின்றி இயங்கி வருவது தெரிகிறது.
அரசிடம் இருந்து உரிய அனுமதி பெறாமல், பள்ளிகளை நடத்துவது பாவம்.தமிழகத்தில் அனுமதியின்றி நடத்தப்படும் பள்ளிகள் குறித்து சர்வே நடத்தி, அவற்றை மூடுவதற்கு தகுந்த நடவடிக்கையை எடுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். வேன் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தகுந்த நஷ்ட ஈட்டை வழங்க, பள்ளியின் தாளாளருக்கு உத்தரவிட வேண்டும்.வழக்கில் பள்ளியின் தாளாளரையும் சேர்க்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாக செல்வதற்கு வகை செய்யும் விதத்தில், உரிய விதிகளை தமிழக அரசு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு நீதிபதிகள் பானுமதி, பால்வசந்தகுமார் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆஜரானார். அரசு தரப்பில் அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா ஆஜரானார். “டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த இடைக்கால உத்தரவு:அனுமதியின்றி இயங்கும் பள்ளிகளை கண்டறிந்து, அவற்றை மூடுவதற்கு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.
அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர், “வேதாரண்யம் சம்பவத்தை தமிழக அரசு கடுமையாக கருத்தில் கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனுமதியின்றி இயங்கும் பள்ளிகளை களையெடுக்கவும், மூடவும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது’ என தெரிவித்தார்.மேலும், அனுமதியின்றி பள்ளிகள் இயங்குவதை அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும், அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் அரசு பிளீடர் கோரியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. பள்ளியின் தாளாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தர விட்டுள்ளது.இந்த வழக்கில் பள்ளி கல்வி இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிக் கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
Leave a Reply