விருதுநகர் : அனைவருக்கும் இடைநிலைக்கல்வி வழங்கும் திட்டம் துவக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை அடுத்ததாக, மத்திய அரசு “ராஷ்டிரிய மத்திம சிக்ஷ அபியான்'(அனைவருக்கும் இடைநிலைக்கல்வி) திட்டத்தை முதலில் தமிழகம், மத்தியபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்துகிறது.
இத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள், கட்டட வசதி, நூலகம், ஆய்வகம், கழிப்பறை வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்திய பின், அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் உள் கட்டமைப்பு குறித்து படிவங்களை டிச., முதல் வாரத்தில் வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
முன்னுரிமை: அனைவருக்கும் இடைநிலைக்கல்வியில் ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையின, மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது. கிராமங்களில் மேம்படுத்தப்பட்ட தரமான கல்வி வழங்கும் பொருட்டு பெண் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் விடுதி வசதி செய்யப்படவுள்ளது. தமிழகத்தில் கல்வியில் பின் தங்கிய பகுதிகளை கண்டறிந்து, அங்கு மாதிரி பள்ளிகளை அதிகளவில் அமைத்து, காலிப்பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
புதிய அலுவலகம்: இடை நிலைக்கல்வி வழங்கும் திட்டம் பத்து ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டு துவக்கப்படுகிறது. இதற்காக மாவட்டம் தோறும் ஒரு அலுவலகம் இம்மாதத்திற்குள் துவக்கப்பட்டு அதிகாரிகளும் நியமிக்கப்படவுள்ளனர்.
உண்டு, உறைவிட பயிற்சி: ஒவ்வொரு கல்வி மாவட்டத்தில் இருந்து 120 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு டிச.,14 முதல் 18 வரையும், ஜன.,19 முதல் 23 ம் தேதி வரையும் அனைருக்கும் இடைநிலைக்கல்வி வழங்குவது குறித்து உண்டு, உறைவிட பயிற்சி அளிக்கப்படுகிறது. பின், அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும். 2020ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் மேல்நிலைக்கல்வி திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Leave a Reply