அனைவருக்கும் இடைநிலை கல்வி தமிழகத்துக்கு ரூ.151.44 கோடி

posted in: கல்வி | 0

தேனி : அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த, நடப்பு ஆண்டுக்கு 151.44 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் மாணவர்கள் இடை நிற்றலை தவிர்க்க, கட்டாய இடை நிலை கல்வியை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக “ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷ அபியான்’ என்ற அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்டத்தை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்த உள் ளது. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும் வகையில் தமிழகத்துக்கு 151 கோடியே 44 லட்சம் ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதன் மூலம், தமிழகத்தின் 32 மாவட்டங் களிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

2012 வரை மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் நிதி பங்களிப்புடனும், அதன் பிறகு 2017 வரை சம பங்களிப்புடனும் திட்டம் செயல்படுத்தப்படும். மாநில அளவில் பள்ளிக் கல்வி இயக்குனரின் தலைமையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் பட்ட பள்ளிகள் மற்றும் புதிய உயர்நிலைப் பள்ளிகள் துவங்கும் போது, அவற்றிற்கு முழு அளவில் வகுப்பறைகள் உட்பட கட்டட வசதிகள் செய்ய, ஒரு பள்ளிக்கு 58 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் வரை நிதி வழங்கப்பட உள்ளது.

இது தவிர தற்போதுள்ள உயர்நிலை பள்ளிகளில் பெரிய அளவிலான பழுதுகளை சரிபார்க்க இரண்டு வகுப்பறைக்கு தலா இரண்டு லட்சம் வரையும், நான்கு வகுப்பறைகள் இருந்தால் நான்கு லட்சம் ரூபாய் வரையிலும் நிதி ஒதுக்கப்பட உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு தற்போது நடந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *