சென்னை: மெரீனா கடற்கரை, 26 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. கல்வெட்டு அருகே மரக்கன்றுகளை நட்டு, முதல்வர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார்.
சென்னை நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையுள்ள 3.10 கி.மீ., நீளமுள்ள மெரீனா கடற்கரையை அழகுபடுத்தும் பணி, 2008ம் பிப்ரவரியில் துவங்கியது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை, மெரீனா கடற்கரைப் பகுதியில் 14 அமர்விடப் பகுதிகளாக நில வடிவமைப்பு செய்யப்பட்டது.பசுமைப் புல்வெளிகள் கொண்ட இந்த 14 அமர்விடப் பகுதிகளிலும் பல்வேறு வண்ணங்களில் ஓடுகளும், சுவர்பகுதிகளில் கிரானைட் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.
செயற்கை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. நடைபயிற்சி மேற்கொள்ள, பல்வேறு வண்ணங்களில் சிமென்ட் கற்களால் 4 மீட்டர் அகலம் கொண்ட நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது.அத்துடன், காமராஜர் சாலையின் கிழக்கு ஓரத்தில் நடந்து செல்வோருக்கு வசதியாக, 5 மீட்டர் அகலத்தில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதையும், அதையொட்டி அழகிய வடிவில் கருங்கல் தூண்களில் இணைக்கப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆன கைப்பிடித் தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன. பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்களுக்கான “பார்க்கிங்’ பகுதிகள், நவீன கழிப்பறை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரையில் எண் கோண வடிவமுள்ள 428 கம்பங்களில், நவீன மின் விளக்குகள்பொருத்தப்பட்டுள்ளன. அவை, கடற்பறவைகள் பறப்பது போன்று காட்சியளிக்கின்றன.
சென்னை மாநகருக்கு அழகையும், பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மனமகிழ்சியையும், மன நிறைவையும் அளிக்கத் தக்கதாக, 25 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்ட புதுப்பொலிவுடன் கூடிய மெரீனா கடற்கரையின் கல்வெட்டை முதல்வர் கருணாநிதி திறந்து, அதன் அருகே மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.துணை முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Leave a Reply