அன்று போலீஸ்… இன்று போலீஸ் கைடு!

posted in: மற்றவை | 0

tblhumantrust_92870295048வயது அறுபதை தொட்டுவிட்டது; உடலில் 37 வருஷம் உறவாடியது காக்கிச்சட்டை. சாதாரண முதல் நிலை காவலராக போலீஸ் பணியில் சேர்ந்து, சப்-இன்ஸ்பெக்டராகி ஓய்வு பெற்றாலும், தர்மராஜின் உணர்விலும், உதிரத்திலும் கலந்திருக்கிறது காவல்துறை.

துறையை விட்டு தூரமாய்ப் போய் விடக்கூடாது என்று அவர் இப்போது குடியிருப்பதும் பொள்ளாச்சி போலீஸ் குவாட்டர்ஸ் பின் புறம்தான். பணியில் இருக்கும் வரை “ஏட்டையா, ரைட்ரு ஐயா, எஸ்.ஐ.,சார்’ என்று அழைக்கப்பட்ட தர்மராஜை இப்போது போலீசார் அனைவரும் அழைப்பது, “போலீஸ் கைடு’ என்றுதான்.பெயருக்கேற்பவே, காவல்துறைக்கு உற்ற தோழனாக, உண்மையான வழி காட்டியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தர்மராஜ். காவல்துறையினரின் பணிகள், பொறுப்பு, சிரமங்கள், சட்ட சிக்கல்கள், அதைச் சமாளிக்கும் விதம் குறித்து விலாவாரியாய்ப் படமெடுப்பதுதான் தர்மராஜின் இன்றைய பணி.போலீஸ் என்றால் எப்படி இருக்க வேண்டும், வழக்கை எப்படி விசாரிக்க வேண்டும், போலீஸ் டைரி பராமரிப்பு, நாட்குறிப்பு, போலீஸ் ஸ்டேஷன் புள்ளி விபரங்கள், பிரேத பரிசோதனை என ஒவ்வொரு விஷயத்தையும் அக்கு வேறு, ஆணி வேராக சொல்லித் தந்து “போலீஸ் கைடு’ என்றே பெயர் வாங்கி விட்டார்.

வெறும் வாய் வார்த்தைகளில் சொல்லித் தருவதோடு நின்று விடாமல், தான் சொல்லித் தரும் விஷயங்களை 2 புத்தகங்களாகவும் எழுதியுள்ளார். அதிலுள்ள தகவல்கள் அரியவை என்பதோடு, ஆச்சரியமூட்டுபவை. வருவாய்த்துறை, வக்கீல்களுக்கும் கூட புலன்விசாரணை பற்றி வகுப்புகள் எடுக்கிறார் தர்மராஜ்.பணியில் இருந்த காலத்தில் நேர்மையான போலீஸ் என்று பெயர் எடுத்து இருப்பதோடு, நூற்றுக்கணக்கான வெகுமதியும், முதல்வரிடம் அண்ணா பதக்கமும் வாங்கியிருப்பதால் தர்மராஜ் வார்த்தைகளுக்கு மரியாதை அதிகம். இவரது “போலீஸ் கைடு’ இல்லாமல் கோவையில் எந்த ஸ்டேஷனும் இல்லை.

“”போலீஸ் சர்வீஸ் முடிந்தும், போலீஸ் துறைக்காக ஏதாவது பண்ணணுங்கிற ஆர்வத்துல, மருத்துவம், சட்டம், விசாரணைன்னு பல கோணத்துல தகவல் சேகரிச்சு புத்தகம் எழுதுனேன். இதுல இருக்குற விஷயங்கள், விசாரணைக்கு உதவியாக இருக்குன்னு எல்லாரும் பாராட்டுறாங்க. என்னோட படைப்புகளை போலீஸ் பயிற்சி பாடத்திட்டத்துல சேர்க்கணும்கிறதுதான் என்னோட ஆசை. அப்பதான், அடுத்த தலைமுறைக்கும் இது பயன்படும்,”தர்மராஜ் பேசும் வார்த்தையிலும் காவல்துறையின் கம்பீரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *