இவர், இப்படி…

posted in: உலகம் | 0

tblworldnews_46900141240தள்ளாத வயதில் “உயர்ந்த’ சாதனை: உலகிலேயே எவரெஸ்ட் சிகரத்தில் மிக அதிக வயதில் ஏறி சாதனை படைத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி இருப்பவர் மின் பகதூர் ஷெர்ச்சான்.

நேபாளத்தை சேர்ந்த ஷெர்ச்சான், தனது 76வது வயதில், இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், ஜப்பானை சேர்ந்த கட்சுசுகே யனகிசவா என்பவர் தனது 71 வயதில் இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை ஷெர்ச்சான் முறியடித்துள்ளார். இவரது சாதனையை கின்னஸ் புத்தகமும் அங்கீகரித்துள்ளது.

பொதுவாக இமயமலையில் ஏறுவது என்பது நேபாளிகளுக்கு கை வந்த கலை என்றாலும், ஷெர்ச்சானுக்கு இதில் அத்தனை ஆர்வம் இருந்தது இல்லை. இத்தனைக்கும் இவர் முறையான மலையேற்ற பயிற்சி பெற்றது கூட கிடையாது. சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டவுடன் தான், பயிற்சி பெற்றார். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால், இந்த தள்ளாத வயதிலும், மலை ஏறுவதற்கு வசதியாக இவரது உடலமைப்பு கை கொடுத்தது.சாதாரணமாகவே, நல்ல உடல் நலனுடன் இருக்கும் இளைஞர்கள் கூட, பனி படர்ந்த சிகரத்தில் அத்தனை எளிதில் ஏறி விட முடியாது. உறைந்திருக்கும் ஐஸ் கட்டிகளின் குளிர், முதுகு தண்டுவடத்தை சிலிர்க்க வைத்திடும். இருந்தாலும், சாதனைக்கு வயது ஒரு பொருட்டல்ல என்ற குறிக்கோளுடன் செயல்பட்டதால், அவர் சாதித்துக் காட்டியுள்ளார்.

இந்த சாதனை குறித்து ஷெர்ச்சான் கூறியதாவது:மிகவும் சிரமப்பட்டுத்தான் இதை சாதிக்க முடிந்தது. என்னுடைய நோக்கமெல்லாம், உலகில் அமைதியும், மனித நேயமும் பரவ வேண்டும் என்பது தான். மலையில் ஏறுவதற்கு முன் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக மனதில் நினைத்துக் கொண்டேன். ஒன்று மலை ஏறுவது அல்லது, இறந்து விடுவது என்ற உறுதியுடன் செயல்பட்டேன். இறுதியில் வெற்றி கிடைத்தது. சமூக நலனுக்காக மீதமுள்ள வாழ்நாளை செலவிட முடிவு செய்துள்ளேன். தெருவோர சிறுவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் பராமரிப்பு இல்லங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். இது சாதனை என்று கூறினாலும், இத்துடன் திருப்தி அடைய மாட்டேன். எனக்கு 84 வயது நிறைவடையும் முன், மீண்டும் ஒருமுறை எவரெஸ்டில் ஏறி விட வேண்டும் என்பது என் ஆசை.இவ்வாறு ஷெர்ச்சான் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *