சென்னை : மீனவர் சட்டத்தை நடப்பு தொடரில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று கூறியதற்காக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவாருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவாருக்கு முதல்வர் கருணாநிதி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடலில் மீனவர்கள் நாட்டின் எல்லை தாண்டி செல்வதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த மீனவர்களுக்கான வரைவு சட்டம் குறித்து தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் பற்றி நான் கடந்த 19&11&2009ல் கடிதம் எழுதினேன். வரைவு சட்டத்தின் பல பிரிவுகள், மீனவர்கள் நலனுக்கு எதிராக இருப்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
என் ஆலோசனையின்படி, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் உங்களை இது தொடர்பாக சந்தித்துப் பேசியதை அறிவீர்கள். பின்னர், மீனவர் அச்சத்தை போக்கும் வகையில் நீங்கள் பேட்டியளித்தீர்கள். இந்த சட்டத்தை இறுதி செய்து நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யும் முன்பாக விரிவான முறையில் இது குறித்து கலந்துரையாடல்கள் மூலம் விவாதித்து, ஒருமித்த கருத்து உருவாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
என் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசின் மீனவர் சட்டம் நடப்பு தொடரில் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என்று முடிவு எடுத்ததற்காக தமிழக மீனவர் சமுதாயம் சார்பில் தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
மீனவர்களின் பிரச்னைகளை உணர்ந்து உரிய நேரத்தில் சரியான முடிவு எடுத்ததற்காக மத்திய அரசுக்கும் தங்களுக்கும் நன்றி கூறுகிறேன்.
Leave a Reply