உலகில் சிறந்த நாடாக இந்தியாவை மாற்ற தலைவர்கள் வழிநடத்திச் செல்ல வேண்டும் : ராமேஸ்வரத்தில் கலாம் பேச்சு

posted in: மற்றவை | 0

tblgeneralnews_18304079772ராமேஸ்வரம் : “”உலகிலேயே மனிதர்கள் வாழ்வதற்கு சிறந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு, தலைவர்கள் வழிநடத்திச் செல்ல வேண்டும்,” என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

ராமேஸ்வரத்திற்கு நேற்று வருகை தந்த அவர், வேர்கோடு புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் நடந்த, கல்வி ஒளி விழாவில் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசியதாவது:

ராமேஸ்வரத்தில் பிறந்தேன், வளர்ந்தேன், வளர்ந்து கொண்டே இருக்கிறேன்… இங்கு நான் படித்த ஊராட்சிப் பள்ளியில், ஆசிரியர் சிவசுப்ரமணிய அய்யர் என் வாழ்க்கைக்கு அடித்தளம் நாட்டினார். அன்று ரம்மியமாக காட்சியளித்த ராமேஸ்வரம் கடற்கரையை, மாணவர்களாகிய நீங்கள் சுத்தமாக வைத்துக்கொள்ளும் இயக்கத்தை ஆரம்பித்து, தமிழகத்திலேயே சுத்தமான கடற்கரையாக உருவாக்க முன்வரவேண்டும்.எனது தந்தையார், ராமேஸ்வரம் பள்ளி வாசல் இமாம். தந்தையின் நண்பர்கள் லட்சுமண சாஸ்திரி கோவில் குருக்கள்; மற்றொருவர் பாதிரியார் பொடேல், ராமேஸ்வரத்தில் முதலாவது தேவாலயத்தை கட்டியவர். இவர்கள் மூவரும், இறைவனின் அருளாசியுடன் சிறந்த நண்பர்களாக விளங்கினர். நாட்டின் கலாசாரத்திற்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக இருந்தனர்.ஐந்து தலைமுறையாக, இத்தீவில் எங்களது குடும்பம் வாழ்ந்து, இந்திய கலாசார பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

எனது ஆசிரியர்கள் கற்றுத்தராமல் இருந்திருந்தால், எனது வாழ்க்கையும் இத்தீவில் முடிந்திருக்கும். லட்சிய வேட்கையுடன் படிக்கும் மாணவர்கள், உயர்ந்த நிலைக்கு செல்வர். நாட்டிலுள்ள கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி, 2020ல் குறைந்து, சுகாதாரம், குடிதண்ணீர், மேம்படுத்தப்பட்டு விஞ்ஞானம், தொழில் வளர்ச்சி நிறைந்த நாடாக இந்தியா மாறவேண்டும். உலகத்திலேயே மனிதர்கள் வாழ விரும்பும் சிறந்த நாடாக இந்தியாவை மாற்ற, எதிர்கால தலைவர்கள் வழிநடத்தி செல்லும் நிலை ஏற்பட வேண்டும்.இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.

முன்னதாக, கலாமை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம், பள்ளி தாளாளர் மைக்கில்ராஜ், கலெக்டர் ஹரிகரன் மற்றும் மாணவியர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *