என் கூடவே பிறந்த காவிரிப் பிரச்சினை -கருணாநிதி

posted in: அரசியல் | 0

22-karunanidhi-videoconference200சென்னை: நான் பிறந்த அதே 1924ம் ஆண்டுதான் காவிரிப் பிரச்சினையும் முதன் முதலாக வெடித்தது. அன்று முதல் இன்று வரை அந்தப் பிரச்சினையுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மேட்டூர் அணை பவள விழா கொண்டாடுகிறது. இதன் நினைவாக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 75 அடி உயர நினைவு தூண் கட்டுவதற்கு முதல்வர் கருணாநிதி இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டிய முதல்வர் நிகழ்ச்சியில் பேசியதாவது…

நான் 1924ம் ஆண்டு நான் பிறந்தேன். அதே ஆண்டில்தான் காவிரிப் பிரச்சினையும் முதன் முதலாக எழுந்தது. அன்றைய மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் இடையே நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை வெடித்தது.

நான் பிறந்த ஆண்டில் உதித்த காவிரிப் பிரச்சினை இன்றளவும் தீராமல் நீடித்துக் கொண்டிருக்கிறது. நானும் இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறேன்.

காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால் அன்றைய சென்னை மாகாண அரசும், மைசூர் மாகாண அரசும் 1924ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அன்றிலிருந்தே இந்தப் பிரச்சினை வெடித்தது. நானும் அதே ஆண்டில்தான் பிறந்தேன்.

1910ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியாள்கள், மேட்டூர் அணையைக் கட்ட முதன் முதலாக திட்டம் வகுத்தனர். இதையடுத்து அப்போதைய மைசூர் ஆட்சியாளர்கள், மைசூர் அருகே காவிரி நீரைத் தேக்கி வைக்க கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்ட வேண்டும் என்று இங்கிலாந்து ஆட்சியாளர்களுக்கு திட்டம் அனுப்பி வைத்தனர்.

ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீட்டில், மேட்டூர் அணை 1934ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

தமிழகத்திலேயே உழவுத் தொழிலுக்கு அச்சாணி காவிரிதான். காவிரிக்குப் பெருமை சேர்ப்பது மேட்டூர் அணை. இந்த மேட்டூர் அணைக்கு 75 வயது முடிந்து இன்று பவள விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

75 ஆண்டுகளுக்கு முன் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டபொழுது இது ஆசியாவிலேயே பெரிய நீர்த்தேக்கம் இன்று தமிழகத்தின் தலையான நீர்த்தேக்கம்.

மேட்டூர் அணையின் பொன் விழா கொண்டாடும் இந்த நல்ல தருணத்தில் இந்த அணைக்குக் கீழே வெள்ளக் காலங்களில் கிடைக்கும் கூடுதல் நீரைத் தடுத்து நிறுத்திட கரிகால் சோழன் கட்டிய கல்லணையைத் தவிர வேறு அணை எதுவுமே இல்லாத குறையைப் போக்கிடக் கருதிய இந்த அரசு, கரூர் மாவட்டம் மாயனூர் அருகே கதவணை அமைத்திட 5.2.2009 அன்று 189 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து அதற்குரிய பணிகளை நிறைவேற்றி வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கதவணையின் மூலம் தேக்கப்படும் வெள்ள நீர் வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விடப்படும்.

வேலூர், காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளைச் செப்பனிடும் திட்டத்திற்கு மத்திய அரசு 375 கோடியே 90 லட்ச ரூபாய்க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மாநில அரசின் பங்காக 93 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயைத் தருவதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

காவிரிப் பாசன விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக திமுக அரசு அமையும் பொழுதெல்லாம் காவிரியாற்றிலும், கிளை ஆறுகளிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதனை தமிழக விவசாயிகள் நன்கு அறிவார்கள்.

2006ல் இந்த அரசு அமைந்த பிறகு 35 கோடியே 80 லட்ச ரூபாயும் அனுமதிக்கப்பட்டு தூர்வாரும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வரும் ஆண்டில் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுடன் கலந்து ஆலோசித்து பொதுப் பணித்துறையும், ஊரக வளர்ச்சித்துறையும் இணைந்து மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்னதாகவே தூர்வாரும் பணிகளை நிறைவேற்றி முடித்திட வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தொன்மை வாய்ந்த காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் அமைந்துள்ள மதகுகள், அணைகள், கதவணைகள் ஆகியவற்றைச் சீரமைத்திடவும், கரைகளைப் பலப்படுத்திடவும், வெள்ளக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்திடவும் உதவும் வகையில் தமிழக அரசு 5 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு பெருந்திட்டத்தைத் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.
Read: In English
இந்நிலையில் மேட்டூர் அணையின் பவள விழா நினைவாக இதன் வலது கரையில் உள்ள குன்றின் மேல் 75 அடி உயரத்தில் ஒரு பவள விழாக் கோபுரத்தூண் அமைத்து, மேட்டூருக்குச் சுற்றுலா வரும் பயணிகள் அதன் மேல் ஏறி நின்று மேட்டூர் அணையையும், நீர்த் தேக்கத்தின் விரிந்து பரந்துள்ள மாட்சியையும், அதன் அருகில் அமைந்துள்ள இயற்கை எழி குலுங்கும் காட்சிகளையும், மேட்டூர் நகரின் தோற்றத்தையும் கண்டு மகிழ வகை செய்யும் ஒரு திட்டத்தினை நிறைவேற்றிட இந்த அரசு 1 கோடி ரூபாயை அனுமதித்துள்ளதுடன், அத்திட்டத்திற்காக இன்று அடிக்கல் நாட்டியுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *