சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்கும் 4 மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ரூ.27 லட்சம் ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.,யில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான பணி தொடங்கியது. 1.030 மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை தேடுவதற்கு பதிவு செய்துள்ளனர். முதல் நாளில் டவர் ரிசர்ச் கேப்பிடிடல் என்ற நிறுவனம் 4 மாணவர்களை ஆண்டுக்கு 27 லட்சம் ஊதியத்தில் வேலைக்குத் தேர்வு செய்தது.
ஐ.ஐ.டி., மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்குத் தேர்வு செய்வதற்காக 200 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. மாணவர்களை வேலைக்கு எடுப்பதற்காக இந்த ஆண்டில் புதிதாக 20 தொழில் நிறுவனங்கள் சென்னை ஐ.ஐ.டி.,யை அணுகியுள்ளன. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு சராசரியாக 15 லட்சம் ரூபாயிலிருந்து 24 லட்சம் ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும் என்று சென்னை ஐ.ஐ.டி., துணைப் பதிவாளர் (வேலைவாய்ப்புப் பிரிவு) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
போஸ்டன் கன்சல்டிங் குரூப், மெக்கன்சி, டச் பேங், டவர் ரிசர்ச் கேப்பிட்டல், ஹிந்துஸ்தான் லீவர், கோல்மேன் சாசே உள்ளிட்ட நிறுவனங்கள் முதல் நாள் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்று மாணவர்களைத் தேர்வு செய்தன. கடந்த ஆண்டில் முதல் நாளில் 13 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டில் முதல் நாளில் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கேம்பஸ் ரெக்ரூட்மெண்ட் பணிகள் வரும் ஜூலை மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் பொருளாதார நெருக்கடி தொடரும் நிலையில் ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு இந்த அளவுக்கு நல்ல ஊதியத்தில் வேலை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply