பெரம்பலூர்: சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.
பஸ்சை பின்தொடர்ந்து வந்த டாடா சுமோ காரில் அந்த கொள்ளைக் கும்பல் தப்பிச் சென்றது.
சென்னையில் இருந்து நேற்றிரவு 7 மணிக்கு அரசு விரைவுப் பேருந்து தஞ்சைக்கு புறப்பட்டது. பேருந்தில் 21 பேர் பயணித்தனர். (இதில் 2 பேர் கொள்ளையர்கள்)
இன்று அதிகாலை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி என்ற இடத்தில் 8 பயணிகள் இறங்கினர்.
வழியில் ஏறிய கொள்ளை கும்பல்:
அப்போது டாடா சுமோ கார் ஒன்று அங்கு வந்தது. அதிலிருந்து இறங்கிய 4 பேர் தஞ்சைக்கு செல்ல வேண்டும் என்று கூறி பேருந்தில் ஏறினர்.
பஸ் கிளம்பி பொன்னேரி என்ற இடத்திற்கு வந்தபோது மீன்சுருட்டியில் ஏறிய 4 பேரில் ஒருவன் டிரைவர் ராஜேந்திரனிடம் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி பஸ்சை நிறுத்தினான்.
மற்றொருவன் கண்டக்டர் சண்முகத்திடம் கத்தியை காட்டி மிரட்டி அவருடைய பணப்பை பறித்தான்.
இதனிடையே சென்னையிலிருந்து அதே பஸ்சில் பயணம் செய்த அந்தக் கும்பலின் 2 கூட்டாளிகளும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர்.
வசந்தி என்ற பெண் பயணியிடம் கத்தியைக் காட்டி 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தனர்.
தடுத்த இன்ஸ்பெக்டருக்கு அடி:
அதே பஸ்சில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மநாபன் பயணம் செய்தார். அவர் இந்த கொள்ளை கும்பலைப் பிடிக்க முயன்றார்.
ஆனால் 6 பேரும் சேர்ந்து அவரைத் தாக்கினர். அவரது செல்போனை பறித்துக் கொண்டு பஸ்சில் இருந்து தூக்கி வெளியே வீசினர்.
தொடர்ந்து அந்தக் கும்பல் பஸ்சில் பயணம் செய்த பாபநாசம் துணை வட்டாட்சியர் இருதயராஜிடம் இருந்து செல்போன், பணத்தை பறித்தனர். எதிர்ப்பு தெரிவித்த இருதயராஜை அந்தக் கும்பல் தாக்கியது.
இந் நிலையில் சில பயணிகள் பஸ்ஸை விட்டு இறங்கி ஓடி உதவி கோரி குரல் தர ஆரம்பித்தனர்.
இதையடுத்து பஸ் அருகே ஒரு டாடா சுமோ வந்தது. அதில் வந்தவர்கள் தங்களை காப்பாற்றப் போகிறார்கள் என்று பயணிகள் நினைத்த நிலையில் கொள்ளைக் கும்பல் சுமோவில் ஏறி தப்பிவிட்டது.
தகவல் அறிந்ததும் அரியலூர் மாவட்ட காவல்துறை எஸ்பி நஜ்மல் ஹோடா, டிஎஸ்பி கோதண்டபாணி தலைமையிலான படை அங்கு வநதது.
கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பஸ்சில் பயணி்த்த நர்சிங் மாணவி நசிமா பானு என்பவரிடம் கொள்ளையர்கள் பையை பறித்தபோது. அதில் தனது சான்றிதழ்கள் இருப்பதாகவும், தான் விரைவில் வெளிநாடு போக இருப்பதாகவும் கூறி பையை தந்துவிடுமாறு கூறியுள்ளார்.
அப்போது கொள்ளையர்கள் நீ எப்படி வெளிநாடு செல்கிறாய் என்று பார்க்கிறோம் என்று கூறியபடி அவரது சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்தனர். இதனால் அவருக்கும் கொள்ளை கும்பலுக்கும் ஏதாவது வகையில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
தமிழகத்தில் நீண்ட காலத்துக்குப் பின் மீண்டும் ஓடும் பஸ்சில் கொள்ளை நடந்துள்ளது பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து பஸ்சில் வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 2 பேரும் பஸ்சில் எத்தனை பேர் உள்ளனர், அது எங்கு வந்து கொண்டுள்ளது என்ற விவரத்தை செல்போன் மூலம் தந்ததன் அடிப்படையில் தான் 4 பேர் வழியில் ஏறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிகிறது.
இதனால் இந்த வழியில் நள்ளிரவில் பயன்படுத்தப்பட்ட செல்போன்களின் பட்டியலை செல்போன் நிறுவனங்களிடம் போலீசார் கேட்டுள்ளனர்.
Leave a Reply