மாமல்லபுரம் : கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே, திடீரென ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை-மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்திலிருந்து 9 கி.மீ., தொலைவில் சூளேரிக்காடு கிராமம் அமைந்துள்ளது.
இங்குள்ள மீனவக்குப்பம் அருகே, தனியாருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு திடீரென ஒரு ஹெலிகாப்டர் தரை இறங்கியது. அதைக் கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள், மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் டி.எஸ்.பி., சம்மந்தமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ., ராஜாங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். மும்பையை தலைமையிடமாகக் கொண்ட யுனைடெட் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்திற்கு புதுச்சேரி விமான நிலையத்தில் கிளை உள்ளது.
இந்நிறுவனத்தின் ஹெலிகாப்டர் நேற்று சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்றது. சென்னையைச் சேர்ந்த ரஞ்சித் ஓட்டினார். சன்சில், ஷைலேஷ் ஆகியோர் உடன் சென்றனர். வழியில் ஹெலிகாப்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டது. அதையடுத்து, உடனடியாக தரை இறக்கப்பட்டது. கடலோர காவல் படையினர் கடந்த இரண்டு நாட்களாக கடற்கரைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவினால் தடுப்பது எப்படி என ஒத்திகை பார்த்தனர். ஒத்திகையின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டர் இறக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது.
Leave a Reply