குமரி மாவட்டத்தில் 326 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 166 பள்ளிகள் விதிகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டது. இதில் 54 பள்ளிகள் கல்வித் துறைக்கு தெரியாமலேயே செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
நாகை மாவட்டத்தில் நடந்த பள்ளி வேன் விபத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பள்ளிகளில் ஆய்வு நடத்தி விதிமீறல்களை கண்டறிய பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். குமரி மாவட்டத்தில் விதிமீறல் பள்ளிகளை கண்டறிய கடந்த ஒரு வாரகாலமாக மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகள் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டன. பள்ளிகளின் அங்கீகாரம், அவை முறையாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா, பள்ளி கட்டிட வசதி, சுகாதார வசதிகள் உள்ளிட்டவை தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர் அடங்கிய 4 பேர் கொண்ட குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது.
இந்த ஆய்வறிக்கை மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மாவட்டத்தில் 156 அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் பட்டியல் மட்டுமே தொடக்க கல்வித்துறையிடம் உள்ளது. தற்போது 326 பள்ளிகள் மாவட்டம் முழுவதும் செயல்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
54 பள்ளிகள் கல்வித்துறைக்கு எந்தவிதமான தகவலையும் தெரிவிக்காமல், அனுமதி ஏதும் பெறாமல் கடந்த பல ஆண்டுகளாக செயல் பட்டுக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பள்ளிகளில் மாணவ மாணவியரை ஏற்றிச்செல்ல வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதாவது இப்படி ஒரு பள்ளி இருப்பதே குமரி மாவட்ட கல்வித்துறைக்கு தெரியவில்லை. இப்படி 54 பள்ளிகள் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வந்துள்ளன.
இங்கு அதிகாரிகள் சென்று இதுவரை ஆய்வு நடத்தியதும் இல்லை. பெற்றோரிடம் பெரிய அளவில் கட்டண வசூலிலும் இந்த பள்ளிகள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பான விபரங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக சென்னை பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பகவதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மெட்ரிக் பள்ளிகள் 150, நர்சரி பள்ளிகள் 167, சி.பி.எஸ்.இ உள்ளிட்ட இதர பள்ளிகள் 9ம் என மொத்தம் 326 பள்ளிகள் செயல்பட்டு வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவற்றில் மெட்ரிக்கில் 21 பள்ளிகளும், நர்சரியில் 30 பள்ளிகளும், இதர பள்ளிகளில் 3ம் என்று மொத்தம் 54 பள்ளிகள் இதுவரை கல்வித்துறையிடம் எந்தவிதமான அனுமதியோ, அங்கீகாரமோ பெறாமல் செயல்பட்டு வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் கல்வித்துறைக்கு தகவல் ஏதும் அனுப்பாமலேயே பள்ளிகள் நடத்தி வந்துள்ளனர். வீடுகள், சிறிய கட்டிங்களில் இந்த பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர மெட்ரிக்கில் 45, நர்சரியில் 67 பள்ளிகள் என்று மொத்தம் 112 பள்ளிகள் தொடர் அங்கீகாரத்திற்கான கருத்துரு அனுப்பி வைக்காமல் உள்ளன. இந்த ஆண்டுக்கு இவர்கள் அங்கீகாரம் பெறவில்லை. இந்த பள்ளிகளுக்கு நாளை (இன்று) முதல் நோட்டீஸ் அனுப்பப்படும். இவர்கள் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கான ஆவணங்களை உடனே தாக்கல் செய்தால் போதும்.
இதுவரை கல்வித்துறைக்கு எந்தவித தகவலுமே தெரியாமல் செயல்பட்டு வருகின்ற 54 பள்ளிகள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பள்ளி களில் செயல்பட தகுதியானவைகள் உரிய ஆவணங்களை பெற்று ஒப்படைத்தால் அவர்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதர பள்ளிகள் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதில் மிக மோசமான பள்ளிகளில் இருந்து மீண்டும் தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கொண்ட குழு வரும் 21ம் தேதி முதல் 54 பள்ளிகளிலும் படிப்படியாக ஆய்வு நடத்த உள்ளது. ஆய்வின்போது உடனுக்குடன் பள்ளிகளை நடத்த தடைவிதித்து உத்தரவும் வழங்கப்பட்டுவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Leave a Reply