ஹைதராபாத்: ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபாலின் உடல் நிலை மோசமானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சியின் மண்டல தலைவர் மணிபால் ரெட்டி என்பவர், தெலுங்கானாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் ராஜகோபால் எம்.பியின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ.50 லட்சம் பரிசு தருவதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், தெலுங்கானா தனி மாநிலத்திற்காக நாங்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்திற்கு இப்போது தான் வெற்றி கிடைத்துள்ளது.
இதைத் தடுக்க உண்ணாவிரதம் இருக்கும் எம்.பி. ராஜகோபாலை சும்மா விடமாட்டோம். அவர் தலையை கொண்டு வந்தால் ரூ.50லட்சம் பரிசு தருவோம்.
தெலுங்கானாவுக்கு எதிராக போராடும் அனைவருக்கும் எங்கள் கட்சித் தொண்டர்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.
மணிபால் ரெட்டியின் இந்த மிரட்டல் குறித்து மனித உரிமை ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் தந்துள்ளது.
இதையடு்த்து இது குறித்து விசாரித்த உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில் தெலுங்கானா எதிர்ப்புப் போராட்டங்கள் 10வது நாளாக தொடர்ந்து வருகின்றன.
இதனால் ராயசீமா, கடலோர ஆந்திராவில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், வக்கீல்கள் போராட்டம் காரணமாக பல இடங்களி்ல் வன்முறை தொடர்ந்து வருகிறது. பஸ், ரயி்ல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களி்ல் 10வது நாளாக பந்த் நடப்பதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலைவாசியும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
திருப்பதி 10வது நாளாக வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வர் உள்ளிட்ட அக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
Leave a Reply