ரியோடி ஜெனிரோ : கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கத்தில் பிரேசிலை சேர்ந்த 100 வயது பாட்டி, விமானத்தில் 4,000 மீட்டர் உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து தரையிறங்க திட்டமிட்டுள்ளார்.
ரியோடி ஜெனிரோவை சேர்ந்தவர் அய்டா மெண்டஸ். கடந்த நவம்பரில் 100வது பிறந்த நாளைக் கொண்டாடினார். கிறிஸ்துமசை வித்தியாசமாக கொண்டாடவும், உலகின் மிக அதிக வயதான பாராசூட்டர் என்ற கின்னஸ் சாதனை படைக்கவும் அய்டா முடிவு செய்தார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று விமானத்தில் பறந்து 4,000 மீட்டர் (13,000 அடி) உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து தரையிறங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கு அய்டாவின் குடும்ப டாக்டர்களும், உறவினர்களும் பச்சைக் கொடி காட்டி விட்டனர்.இதுபற்றி அய்டா மெண்டஸ் கூறியதாவது:கடந்த நவம்பரில் சதம் அடித்தேன். எனினும், வயதுதான் அதிகம். உடல் வலிமையில் நான் 50 வயது பெண்ணாக உணர்கிறேன். சிறு வயதில் நிறைய சாகச விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளேன். கிறிஸ்துமசை வித்தியாசமாக கொண்டாட யோசித்துக் கொண்டிருந்தேன்.இந்த வயதில் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிக்க முடியுமா என்று எனது பேரன் சவாலாக கேட்டான். அதை ஏற்றுக் கொண்டேன். இந்த முயற்சியை எனது பிறந்த நாள் பரிசாக கருதவில்லை. கிறிஸ்துமஸ் பரிசாக நினைக்கிறேன் என்றார். மகாபா என்ற நகரின் அமாபா என்ற இடத்தில் இந்த சாதனையை அய்டா மெண்டஸ் நிகழ்த்தப் போவதாக பிரேசில் இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Leave a Reply