சென்னை: ‘கேட்’ தேர்வுகளில் ஏற்பட்டுள்ள தொடர் குளறுபடி அத்தேர்வுகளின் மீதான மதிப்பையே கேள்விக்குறியாக்கி உள்ளதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
மத்திய அரசால் நிறுவப்பட்ட ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை பெற ‘காமன் அட்மிஷன் டெஸ்ட்’ (கேட்) தேர்வு மதிப்பெண் அவசியம். மிகக் கடினமானதாக கருதப்படும் இத்தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் நாட்டின் முக்கிய தனியார் நிறுவனங்களிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
ஆண்டுதோறும் அதிகரித்து வந்த இத்தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு குறைந்தது. கடந்தாண்டு 2.70 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இந்தாண்டு 2.40 லட்சமாக குறைந்தது. இதற்கு, இதுவரை, எழுத்துத் தேர்வாக நடத்தப்பட்டு வந்த ‘கேட்’ இந்தாண்டு முதல் ஆன்லைன் தேர்வாக மாற்றப்பட்டதும், உலகப் பொருளாதார மந்தநிலையும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
எனினும், கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் இத்தேர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது. ஆன்லைன் தேர்வு குறித்த பயத்தை மாணவர்கள் மத்தியில் போக்கும்விதமாக தேர்வு துவங்குவதற்கு முன்பே ‘டெமோ’ மூலம் விளக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வு துவங்குவதற்கு இரண்டுமணிநேரம் முன்பே தேர்வு மையத்திற்கு மாணவர்களைச் வரச் சொல்லியும் அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட வில்லை என்று மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி, இன்டெர்நெட் மூலமாக அளிக்கப்பட்ட ‘டெமோ’ விலும் ‘ஹைலட்டடிங்’ செய்துகொள்வது போன்ற வசதிகள் ‘அப்டேட்’ செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த குறைபாடுகள் ஒருபுறம் இருக்க, 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த ஆன்லைன் தேர்வு துவங்கிய (நவ. 28ம் தேதி) முதல் நாளிலேயே கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் பெரும் கோளாறு ஏற்பட்டது. இதனால், சென்னை, பெங்களூரு, லக்னோ, சண்டிகார் போன்ற தேர்வு மையங்களில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் மனதளவில் கடும் பாதிப்படைந்தனர். இரண்டாவது நாள், மூன்றாவது நாள் எனத் தொடர்ந்த குளறுபடி நான்காவது நாளாக நேற்றும் சில மையங்களில் அரங்கேறியது. இது எந்தளவு மாணவர்களின் மனதை பாதித்திருக்கும் என்பதை வார்த்தைகளால் கூறுவது கடினம்.
ஏனெனில், ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்ற கனவோடு, சிவில் சர்வீஸ் தேர்வை போன்று நான்கு ஆண்டுகள் தொடர்ந்து ‘கேட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர்களும் உள்ளனர். கம்ப்யூட்டர் சர்வரில் ஏற்பட்ட கோளாறால், பல நிமிடங்கள் காலதாமதமாகவும் சில மையங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தேர்வு மையங்களான பலதரப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள கம்ப்யூட்டரின் வேகம் வேறுபட்டவை. சில மையங்களில் எந்தவித கோளாறு இன்றியும், சில மையங்களில் தொழில்நுட்ப கோளாறின் காரணமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் மாற்றம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘தேர்விற்கான வினாக்களை தயாரிப்பது மட்டுமே எங்களது பொறுப்பு, தேர்வினை நடத்துவது முற்றிலும் ‘புரோமெட்ரிக்’ என்ற அமெரிக்க நிறுவனத்தின் பொறுப்பு’ என்று ஐ.ஐ.எம்.,கள் தெரிவிக்கின்றன. வைரஸ் காரணமாக ஏற்பட்ட இந்த கோளாறை விரைவில் சரிசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தேர்வு நடந்த முதல் மூன்று நாட்களில் நாடுமுழுவதிலும் 40 மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், நான்காவது நாளாக தொடர்ந்து நேற்றும் குளறுபடி தொடர்ந்துள்ளது. இதனால் ஆர்வமுடன் உரிய முறையில் தாயாராக வந்த மாணவர்கள் மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி ஐ.எம்.எஸ்., கல்வி நிறுவன சென்னை துணை பொதுமேலாளர் சரித் நாயர் கூறுகையில், “இந்த தொடர் குளறுபடியால் அனைத்து மாணவர்களுக்கும் உரிய வாய்ப்பின்கீழ், அவர்களது திறன் பரிசோதிக்கப்படுவதில்லை. இல்லையென்றால், கொஞ்சம் மூளை மற்றும் ‘லக்’ உள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் நிலை ஏற்படும். இதுவரை மூளையுள்ள மாணவர்களே ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் சேர்ந்த நிலை இந்தாண்டு நீடிக்காமல் போகலாம். இது ‘கேட்’ தேர்வின் மீதான நம்பிக்கையையும், மதிப்பையும் குறைக்கும் நிகழ்வாக அமையலாம். எனவே, அனைவருக்கும் ஒரே மாதிரியான தொழில்நுட்ப, உள்கட்டமைப்பு வசதி அளிக்கப்பட்டு, மாணவர்கள் மதிப்பிடப்பட வேண்டும். அதுவே சரியான தேர்வாக இருக்கும். அதற்கு, இதுபோன்ற குளறுபடி முற்றிலுமாக நிவர்த்தி செய்யப்பட்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்; அல்லது இந்தாண்டும் கடந்தாண்டுகளைப் போல எழுத்துத் தேர்வாக அமைய வேண்டும்.’ என்றார்.
எந்த ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் போதும், குளறுபடிகள் நிகழ்வது இயல்பே. அதற்காக, எந்த ஒரு மாணவனின் உண்மையான உழைப்பு, முயற்சி, கனவு கேள்விக்குறியாகிவிட, அவை இருக்கக் கூடாது என்பதை, உரியவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்; அதற்கு சரியான தீர்வு காண வேண்டும்.
Leave a Reply