சென்னை: “”சமச்சீர் கல்வியின் பொதுப் பாடத்திட்ட வரைவில், இந்து மதத்திற்கோ அல்லது எந்த ஒரு மதத்திற்கும் எதிரான கருத்துக்கள் இடம்பெறவில்லை,” என அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த பொது பாடத்திட்ட வரைவு, இணையதளத்தில் கடந்த அக்டேபர் 16ம் தேதி வெளியிடப்பட்டது. பொதுப் பாடத்திட்ட வரைவு மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையிலான பாடத்திட்டங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரிடம் கருத்துக்களையும் பெற்று பரிசீலனை செய்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மதச்சார்பற்ற தன்மையினைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத் திட்டத்தில் விழிப்புணர்வுப் பாடல்கள், மறுமலர்ச்சிப் பாடல்கள், வாழ்த்துப் பாடல்கள் ஆகியவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது போலவே இடம்பெற்றுள்ளன.
இஸ்லாமியர் வருகை, அவர்களின் ஆட்சி முறை இந்திய வரலாற்றின் ஒரு கூறாகும். இதன் அடிப்படையில் அவற்றை பற்றிய பாடங்கள் வரைவுப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. ஈ.வெ.ரா.,வின் பகுத்தறிவு மற்றும் சமுதாய சீர்திருத்தச் சிந்தனைகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதன் அடிப்படையில் பொது பாடத்திட்டத்திலும் ஈ.வெ.ரா., பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது. பொதுப்பாடத் திட்ட வரைவில் இந்து மதத்திற்கு எதிராகவோ அல்லது எந்த ஒரு மதத்திற்கு எதிரான கருத்துக்களோ இடம்பெறவில்லை, அத்தகைய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறுவது தவறானது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply