ராமர் சேது பாலத்தை சேதப்படுத்தாமல், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, நிபுணர் குழு அளித்த அறிக்கை பற்றிய நிலையை, மத்திய அரசு இரண்டு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
“சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ எனக்கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், பாஞ்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீன் ரவால் கூறியதாவது: சேது சமுத்திர திட்டம் தொடர்பாக என்.ஐ.ஓ., ஆரம்பகட்ட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதை இறுதி அறிக்கையாக எடுத்துக் கொள்ள முடியாது. சுற்றுச் சூழல் நிபுணர் பச்சவ்ரி தலைமையிலான நிபுணர் குழுவினர் அளித்த அறிக்கையையும் இது கட்டுப்படுத்தாது. என்.ஐ.ஓ., சமர்ப்பித்த அறிக்கை பற்றி, கடந்த நவம்பர் 10ம் தேதி நிபுணர் குழுவினர் கூடி ஆலோசித்துள்ளனர்.
சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வை அடுத்த 18 மாதங்களில் மேற்கொள்ளும்படியும் பரிந்துரை செய்துள்ளனர். நிபுணர் குழுவின் இந்த முடிவால், சுற்றுச் சூழல் மதிப்பீட்டு ஆய்வு தொடர்பான இறுதி அறிக்கை வரும் வரை, சேது சமுத்திர திட்டத்தை மாற்று பாதையில் அமல்படுத்துவது தொடர்பாக எந்த விதமான இறுதி முடிவும் எடுக்க முடியாது.
சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வு எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அதனால், சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் அமல்படுத்துவது என்றாலும், அதற்கும் இந்த ஆய்வை நடத்த வேண்டியது அவசியம். என்.ஐ.ஓ., கொடுத்த விவரங்கள் போதுமானதாக இல்லை என, பச்சவ்ரி தலைமையிலான நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஹரீன் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்காக, சுப்ரீம் கோர்ட் 16 மாதங்களாக காத்துக் கொண்டிருக்கிறது. அதனால், எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் உள்ளோம். நிபுணர் குழுவினர் விரிவான ஆய்வு மேற்கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது. சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மாற்று வழியில் அமல்படுத்துவது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்க எவ்வளவு காலமாகும் என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள். நிபுணர்கள் குழுவுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்துங்கள். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
உடன் ஹரீன் ரவால், “”நிபுணர்கள் குழுவிற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. இருந்தாலும், அவர்களிடம் தகவல் கேட்கிறேன். நிபுணர்கள் குழுவை தொடர்பு கொண்டு விவரம் அறியும்படி அரசையும் கேட்டுக் கொள்வேன். இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க முடியுமா என்றும் தகவல் அறிந்து தெரிவிக்கிறேன்,” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மாற்று வழியில் அமல்படுத்துவது தொடர்பாக நிபுணர்கள் குழு அளித்த அறிக்கை மீதான மத்திய அரசின் நிலையை இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி நடைபெறும்’ என, உத்தரவிட்டனர்.
Leave a Reply