‘ஜாக்கெட்’: அரசின் கட்டுப்பாடு-ஆசிரியைகள் கடும் அதிருப்தி

posted in: மற்றவை | 0

சென்னை: நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது குறித்து ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடை அணிவது குறித்து அரசு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆசிரியைகள் கண்டிப்பாக புடவையில்தான் வர வேண்டும். ஆசிரியர்கள் டீ சர்ட் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது. நாகரீகமான முறையில் உடையணிய வேண்டும் என இந்த கட்டுப்பாடு கூறுகிறது.

இருப்பினும் சில பள்ளிக்கூட ஆசிரியைகள் குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியைகள் விதம் விதமான டிசைன்களில் ஜாக்கெட் அணிந்து வருவதாக பெற்றோர்கள் தரப்பில் அரசுக்கு தொடர்ந்து புகார் கள் போய்க் கொண்டிருந்ததால், உடைக் கட்டுப்பாட்டை நினைவுபடுத்தி சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கை விடுத்திருந்தது.

இதற்கு ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒரு அரசு ஆசிரியை கூறுகையில், எங்களது ஆசிரியப் பணி குறித்து அரசு தீவிரமாக கண்காணிப்பதையும், அதுதொடர்பான நடவடிக்கைகளையும் நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம்.

அதை விடுத்து, நாங்கள் எப்படி ஜாக்கெட் போட வேண்டும் என்று அரசு கூறுவது நல்ல டேஸ்ட்டில் இருப்பதாக தெரியவில்லை. பள்ளிக்கு வரும்போது சேலைதான் அணிய வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்த நாள் முதலே இதை நாங்கள் பழக்கப்படுத்திக் கொண்டு விடுகிறோம்.

ஆனால் நாகரீகமான முறையில் என்ற வார்த்தையை அரசு பயன்படுத்துவது எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்போது நாங்கள் அநாகரீகமான முறையில் வருவது போல மக்களுக்கு தோற்றத்தை ஏற்படுத்துகிறது அரசின் சர்க்குலர்.

குறிப்பிட்ட ஆசிரியைகள் கண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட் அணிந்து வருவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஒட்டு மொத்த ஆசிரியைகளுக்கும் நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணியுங்கள் என்று சொல்வது எங்களை அவமானப்படுத்துவது போல உள்ளது என்றார்.

ஆனால் உடைக் கட்டுப்பாட்டு உத்தரவு புதிதாக பிறப்பிக்கப்பட்டதல்ல. நீண்ட காலத்திற்கு முன்பே இது அமலுக்கு வந்து விட்டது என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது.

மேலும், ஆசிரியக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடையே உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. மேலும் இந்த இயக்குநரகத்தில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றும் பெண்களைத் தனித்துக் காட்டுவதற்காக அவர்களுக்கென்று தனி சீருடையும் கடந்த 70களில் அமல்படுத்தப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது.

அரசு நாகரீகம் என்ற வார்த்தையை எந்த அர்த்தத்தில் சொல்ல வருகிறது, அதுகுறித்து விளக்க வேண்டும் என் மகளிர் உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியு்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொருளாளர் ஜான்சிராணி கூறுகையில், ஒரு பெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும். அவரால் எந்த உடையை வாங்க முடியுமோ அதைத்தான் வாங்கி அவர் அணிய முடியும். தனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது.

எது நாகரீகமான உடை என்பது பெண்களுக்கு தெரியாதா? என்கிறார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *