தனியார் பள்ளிகளின் அமைவிடங்கள் அடிப்படையில், நான்கு பிரிவுகளாக பிரித்து, கட்டணம் நிர்ணயம் செய்ய, கட்டண சீரமைப்புக் குழு திட்டமிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கி, அதில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்களைப் பெறுவதற்கு குழு உத்தரவிட்டுள்ளது.தனியார் பள்ளிகளின் கட்டணங்களை ஒழுங்குமுறைப்படுத்தி, சீரான கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம், டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று காலை நடந்தது.இதில், குழு உறுப்பினர்கள் பெருமாள்சாமி (பள்ளிக்கல்வி இயக்குனர்), மணி (மெட்ரிக் பள்ளி இயக்குனர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தனியார் பள்ளிகளின் அமைவிடப் பகுதிகள் அடிப்படையில், கிராமப்புற பகுதி, மாவட்ட தலைநகர், மாநகராட்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளாக பிரித்து, பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் – மாணவர் எண்ணிக்கை, கல்வித் தரம் உள்ளிட்ட அளவுகோள்களின் அடிப்படையில், புதிய கட்டணத்தை நிர்ணயிக்கலாம் என கூட்டத்தில் விவாதிக்கப் பட்டுள்ளது.முதற்கட்டமாக, தனியார் பள்ளிகளின் தற்போதைய நிலை குறித்த புள்ளி விவரங்களை பெறுவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி அமைவிடம், உள்கட்டமைப்பு வசதிகள், எந்தெந்த தலைப்புகளின் கீழ் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் பெறப்பட உள்ளன. இதற்காக, ஒரு விண்ணப்பம் தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள மெட்ரிக் – ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல் பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.
இந்த விவரங்களைப் பெற்றதும், அதன்படி ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்டம் வாரியாக, பொது மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி, அவர்களின் ஆலோசனைகள் கேட்கப்படும். ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகிகள், கல்வியாளர்கள் ஆகியோரிடமும் கருத்துக்களை கேட்டறிந்த பின், புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Leave a Reply