நடுவீரப்பட்டு : தமிழகத்தில் புதிதாக 110 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். கடலூர் அடுத்த வெள்ளக்கரை ஊராட்சி வி.காட்டுபாளையத்தில் இலவச கலர் “டிவி’ வழங்கும் விழா நடந்தது.
திருவந்திபுரம், வெள்ளக்கரை மற்றும் குமளங்குலம் ஊராட்சிகளை சேர்ந்த 4,847 பயனாளிகளுக்கு இலவச கலர் “டிவி’க்களை வழங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழகத்தில் புதிதாக 110 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் ஒன்பது ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவக்கப்பட உள்ளன. வெள்ளக்கரை ஊராட்சி வி. காட்டுப்பாளையத்தில் 21 லட்சத்து 792 ஆயிரம் ரூபாய் மதிப்பில் துவங்கப்பட உள்ளது. இதற்கு இடத்தை இலவசமாக வழங்கிய முத்துகுமாரசாமியை பாராட்டுகிறேன்.
அரசின் திட்டங்களை உடனுக்குடன் செய்து முடிக்க, அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது எந்த பணியையும் செய்ய முடியவில்லை. தற்சமயம் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக்களுக்கு தேவையான அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கடந்த 1996ம் ஆண்டு அமைச்சராக இருந்த போது, இந்த தொகுதியில் 15 கோடிக்கு மேல் நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். இவ்வாறு, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
Leave a Reply