சென்னை : தெலுங்கானாவைத் தொடர்ந்து, தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பிரிவினை கோஷம் தமிழகத்தில் எழுந்தது. “தமிழகத்தைப் பிரிக்கும் எண்ணம் இல்லை’ என திட்டவட்டமாக அறிவித்ததன் மூலம், பா.ம.க., ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி “பளீர்’ பதிலடி கொடுத்துள்ளார்.
ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், “திடீர்’ உண்ணாவிரதம் மேற்கொண்டார். பத்து நாட்கள் நீடித்த இந்த உண்ணாவிரதத்தால், ஆந்திரா போர்க்களமானது. போராட்டத்திற்கு பணிந்த மத்திய அரசு, தெலுங்கானா மாநிலம் அமைய பச்சைக் கொடி காட்டியது.மத்திய அரசின் இந்த அறிவிப்பால், அமைதி திரும்புவதற்கு மாறாக, தெலுங்கானா எதிர்ப்பு புயல் தற்போது வீசி வருகிறது. தெலுங்கானா மாநிலம் உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர்கள் உள்ளிட்ட ஆந்திர எம்.எல்.ஏ.,க்கள் 130 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆந்திராவில் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளதால், தெலுங்கானா புயல் இன்னும் ஓயாமல் தொடர்கிறது.
இதற்கிடையே, ஆந்திரா பாணியில் தமிழகத்தை வட, தென் தமிழகம் என இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மதுரையைத் தலைநகராகக் கொண்டு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற பிரிவினை கோஷத்தை எழுப்பி வந்த சில அமைப்புகள், தற்போது மீண்டும் இந்த கோரிக்கைக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக, அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக, தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டுமென கோரிக்கை எழுப்பியுள்ள பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அதை நியாயப்படுத்தியுள்ளார்.”தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு என தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். அவ்வாறு பிரிப்பதால் நன்மையே ஏற்படும். இந்த கோரிக்கையை அப்போது எதிர்த்தவர்கள், இப்போது எதிர்க்க மாட்டார்கள். இப்போது சூழ்நிலை மாறியுள்ளது’ என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது போன்ற பிரிவினை பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்ற பேச்சுக்கு இங்கே இடமில்லை. அப்படிப்பட்ட ஒரு கருத்து தி.மு.க.,வுக்கும் இல்லை; மக்களுக்கும் இல்லை,” என முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாக நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தனி தெலுங்கானா பிரச்னையில் ஆந்திராவில் வன்முறை தலைவிரித்தாடுகிறதே. மத்திய அரசு அப்பிரச்னையை சரியாகக் கையாளவில்லை என்று நினைக்கிறீர்களா?
தாமதமான அறிவிப்பும், அதைத் தொடர்ந்து அவசரமான முடிவும் எடுக்கக்கூடாது என்பதை, இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழகத்தையும் இது போல பிரிக்க வேண்டும் என்று சிலர் சொல்வதை பற்றி?
அதற்கெல்லாம் இங்கே இடமில்லை. அப்படிப்பட்ட ஒரு கருத்து தி.மு.க.,வுக்கும் இல்லை; தமிழக மக்களுக்கும் இல்லை.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
Leave a Reply