மும்பை:குழந்தை பெற்ற தாய்மார்கள், தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லையே என, இனி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்த சில ஆண்டுகளில் குழந்தை பெற்ற தாய்மார் களை அதிகளவில் வேலைக்கு அமர்த்த முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.தாய்மார்கள், குழந்தையை பராமரிப்பதுடன், அலுவலகம் சென்று வேலை பார்ப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். இந்தியாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் இப்பிரச்னை உள்ளது.இதனால், எத்தனை திறமை இருந்தாலும், குழந்தை பெற்றவுடன் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதை நிறுத்தி விடுகின்றனர்.
சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், குழந்தை பெற்ற தாய்மார்களை வேலைக்கு அமர்த்துவது இல்லை.ஆனால், இனிமேல் அதுபோல் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகளை அளிக்க, இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் முன்வந்துள்ளன.இது தொடர்பாக ரெகுஸ் என்ற வேலை வாய்ப்பு நிறுவனம் 13 நாடுகளில் உள்ள 11 ஆயிரம் முன்னணி நிறுவனங்களில் ஆய்வு நடத்தியது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள், பெண்களை அதிகளவில் பணிக்கு அமர்த்த முன்வந்துள்ளன. குறிப்பாக, குழந்தை பெற்ற, வேலையில் திறமைவாய்ந்த பெண்களை அதிகளவில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளன.
இவர்களுக்கு நாள் முழுவதும் வேலை கொடுப்பதை விட, பகுதி நேர வேலைகளில் பணியமர்த்த முடிவு செய்துள்ளன. இதன்மூலம், இவர்கள் தங்கள் குழந்தையை பராமரிக்கவும், மற்ற நேரத்தில் தங்கள் பணியில் கவனம் செலுத்தவும் வாய்ப்பு கிடைக்கும்.சர்வதேச அளவிலும் பல முன்னணி நிறுவனங்கள், இதே திட்டத்துடன் தான் உள்ளன.இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.எனவே, திறமைவாய்ந்த பெண்கள், குழந்தை பெற்றவுடன், வீடுகளுக்குள் முடங்கி கிடக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.
Leave a Reply