தெலுங்கானா இப்போது இல்லை என்று மத்திய அரசு அறிவித்ததால் நேற்று ஆந்திராவில் தெலுங்கானா பகுதியில் பயங்கர கலவரம் வெடித்தது.
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா பகுதியை சேர்ந்த 13 எம்.பி.க்கள், 82 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
ஐதராபாத் நகரம் உள்பட தெலுங்கானாவின் 10 மாவட்டங்களிலும் சாலை மறியல், கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. ஐதராபாத் நகரம் போர்க்களம் போல மாறியது. கடைகள் அடைக்கப்பட்டு, பஸ்கள் ஓடாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
சுமார் 20 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உடைக்கப்பட்டன. கலவரத்தை ஒடுக்க மத்திய துணை நிலை ராணுவமும், தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் விரைந்துள்ளனர்.
தெலுங்கானாவில் உள்ள காங்கிரஸ், பா.ஜ.க. தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ் டீரிய சமிதி, பிரஜா ராஜ்ஜியம் மற்றும் இடது சாரி கட்சிகள் என எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்தி வருவதால் மத்திய அரசு கடும் திணறலை சந்தித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இன்று நடக்க இருந்த முழு அடைப்பு போராட்டத்தை தெலுங்கானா போராட்டக் குழுவினர் கைவிட்டனர். இதனால் தெலுங்கானா பகுதியில் இன்று சற்று அமைதி காணப்பட்டது.
தெலுங்கானாவில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் தெலுங்கானா கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஐதராபாத் நகரில் போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடைகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வியாபாரம் நடந்தது.
தெலுங்கானாவின் 10 மாவட்டங்களிலும் இன்று வாகனங்கள் ஓடின. ஆனால் தெலுங்கானாவில் இருந்து ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரா மாவட்டங்களுக்கு எந்த வாகனத்தையும் போராட்டக்காரர்கள் அனும திக்கவில்லை.
எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்ற பீதி மக்களிடம் நிலவுகிறது. இதனால் தெலுங்கானாவின் 10 மாவட்டங்களிலும் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட போதிலும் சில இடங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை ஐதராபாத்தில் பி.எஸ்.என்.எல். டவருக்கு சிலர் தீ வைத்தனர். இதில் அந்ததகவல் தொடர்பு கோபுரம் முழுவதும் எரிந்து நாசமானது.
தெலுங்கானாவில் பஞ்சாயத்து தலைவர் முதல், மந்திரிகள் வரை மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். இதனால் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. எல்லா அத்தியாவசிய சேவைகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா பிரச்சினை முற்றினால், அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த மத்திய அரசு தீர்மா னித்துள்ளது. இதற்காக ஓசையின்றி தயாராகி வருகிறது. முதல் கட்ட வேலைகளை மத்திய அரசு அதிகாரிகள் தொடங்கி விட்டதாக தெரிய வந்துள்ளது.
அதன்படி ஆந்திரா கவர்னர் என்.டி.திவாரியை மாற்ற ஆலோசனை நடந்து வருகிறது. ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் போது, தெலுங்கானா கல வரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் ஆற்றலும், துணிச்சலும் உள்ள ஒருவர் கவர்னராக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைப்பதால் என். டி.திவாரியை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேறுமாநிலத்தில் கவர்னராக உள்ள ஒருவரை ஆந்திராவுக்கு மாற்றுவதற்கு பதில் புதிய நபர் ஒருவரை கவர்னர் ஆக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கேரளமாநில காங்கிரஸ் தலைவர் உமன் சாண்டியை ஆந்திரா கவர்னராக்க ஆலோ சிக்கப்பட்டது. ஆனால் சிக்கலான நேரத்தில் அங்கு போகவிருப்பம் இல்லை என்று கூறி உமன்சாண்டி, அந்தவாய்ப்பை நிராகரித்து விட்டார்.
இதையடுத்து வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆலோசனை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஏற்பாடுகள் நடக்கும் தகவலை ஆந்திரா முதல்- மந்திரி ரோசய்யாவிடம் நேற்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி ஆட்சி விரைவில் அமல்படுத்தப்படும் என்று ரோசய்யா விடம் சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சு நடத்த மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் விரைவில் ஐதராபாத் செல்ல உள்ளார். அவர் ஆந்திரா நிலவரத்தை ஆய்வு செய்வார்.
நேற்று ஆந்திரா முதல்- மந்திரி ரோசய்யாவை உளவுத்துறை இணை இயக்குனர் மதன்மோகன் சந்தித்து 20 நிமிடம் பேசினார். ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திய பிறகு சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்ததாக தெரிகிறது.
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக, ஆந்திரா, தெலுங்கானா அரசியல்வாதிகளிடம் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
Leave a Reply