தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு, சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவின் உடல்நிலை சீரியசாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஆந்திராவில் பெரிய அளவில் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், கடந்த பத்து நாட்களாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார். ஐதராபாத் நிஜாம் மருத்துவமனையில் 30 பேர் அடங்கிய டாக்டர்கள் குழு, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.சந்திரசேகர ராவுக்கு ஆதரவாக, தெலுங்கானா பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஏராளமான பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டன. தெலுங்கானா பகுதிகளைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும், தனி மாநிலம் அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கு விடுமுறை விடப்பட்டபோதும், அங்குள்ள மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சந்திரசேகர ராவின் உண்ணாவிரதம் நேற்று பத்தாவது நாளை எட்டியதை அடுத்து, அவரது உடல்நிலை சீரியஸ் ஆனது.
இதுகுறித்து நிஜாம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரசாத ராவ் கூறியதாவது: சந்திரசேகர ராவுக்கு சலைன் ஏற்றப்பட்டு வருகிறது. இது அதிக நாளுக்கு பலன் தராது. அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அவரது ரத்தத்தில் புரோட்டீன் அளவு வேகமாக குறைந்து வருகிறது. இதனால், வேறு விதமான தொற்றுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும். உடனடியாக, அவருக்கு வாய் வழி உணவுகள் வழங்கப்பட வேண்டும். அவரது உயிருக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டுமெனில், உடனடியாக உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.இவ்வாறு பிரசாத ராவ் கூறினார்.
ஒத்திவைப்பு: இதையடுத்து, தெலுங்கானா பகுதிகளாக கருதப்படும் ஐதராபாத் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சந்திரசேகர ராவுக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய அளவில் வன்முறை வெடிக்கும் என, அஞ்சப்படுகிறது. இதனால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர சுகாதார அமைச்சரின் வீட்டை, டி.ஆர்.எஸ்., ஆதரவாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர். நாளை ஆந்திரா சட்டசபையை நோக்கி மிகப் பெரிய அளவில் ஊர்வலம் நடத்தவும் தெலுங்கானா ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.இதனால், பாதுகாப்பிற்காக 15 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசுக்கு, மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி, டி.ஆர்.எஸ்., கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், ஆந்திர சட்டசபை நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.
காங்கிரஸ் முடிவு என்ன? சந்திரசேகர ராவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தெலுங்கானா விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு, மத்திய, மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து காங்., மேலிடம் டில்லியில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஆந்திர மாநில காங்., தலைவர் ஸ்ரீநிவாஸ் மற்றும் காங்., எம்.பி.,க்கள் டில்லியில் முகாமிட்டு, கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.தெலுங்கானா விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்கும்படி இவர்கள், கட்சித் தலைமையை வற்புறுத்தி வருகின்றனர். இதுகுறித்து காங்., மூத்த தலைவர் வீரப்ப மொய்லி உடனும், காங்., எம்.பி.,க்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.ஐதராபாத்தில் இதுகுறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ரோசய்யா, இன்று டில்லி செல்கிறார். சோனியா உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடன் தெலுங்கானா விவகாரம் குறித்து அவர் விரிவாக ஆலோசனை நடத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் எந்த நேரத்திலும் முடிவை அறிவிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply