தேனி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றோர் சொத்து ஜப்தி? டி.ஆர்.ஒ.,வுக்கு உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை:தேனி காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சீதாராம் இன்வெஸ்மென்ட் பங்குதாரர் ஜக்கையன், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட் மனு:எங்கள் நிறுவனம் மூலம் 1996 முதல் மக்களிடம் டிபாசிட் பெற்று அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு கடன் கொடுத்தோம்.

நான்கு கோடியே 45 லட்சம் ரூபாய் டிபாசிட் ஆக பெற்றும், கடன் கொடுத்த வகையில் ஒரு கோடியே 42 லட்சம் ரூபாய் கடன்தாரர்களிடம் வசூலிக்க முடியவில்லை. வசூலித்த பணத்தை கொண்டு, டிபாசிட் தாரர்களுக்கு கொடுக்க வேண்டிய முதலீட்டுக்கு வட்டியுடன் சேர்த்து, மூன்று கோடியே 25 லட்சம் ரூபாய் திருப்பி கொடுத்துள்ளோம். ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் டிபாசிட் தொகை முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.

கடந்த 2002-03ல் கந்து வட்டி சட்டம் அமலுக்கு வந்ததால், கடன் தொகையை வசூலிக்கவில்லை. கடன் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்து, கடன் வசூலிக்க விடாமல் செய்தனர். அசலை மட்டும் வசூலிக்க முடிந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க இயலவில்லை. கடன் பெற்றவர்களிடம் பணத்தை வசூலித்து முதலீட்டாளர்களுக்கு திருப்பி கொடுப்பதில் ஆட்சேபனை இல்லை. கடன் பெற்றவர் சொத்துக்களை தமிழக டிபாசிட் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள, தேனி மாவட்ட வருவாய் அலுவலருக்கு கடந்த அக்., 6ல் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

கடன் பெற்றவர்கள் சொத்துக்களை கையகப்படுத்தி, முதலீட்டாளர்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் முத்து விஜயபாண்டி ஆஜரானார்.நீதிபதி எம்.ஜெயசந்திரன், “”மனுதாரர் மனுவை மூன்று மாதங்களுக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ” என வருவாய் அலுவலருக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *