சென்னை : “பொது மக்களுக்கு தொந்தரவு தரும் விதத்தில், குடியிருப்பு பகுதியில் நாய்கள் மற்றும் பிராணிகளை வளர்க்க, யாருக்கும் உரிமையில்லை’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை சர்க்யூட் ஹவுஸ் சாலையில், விக்ரம் என்பவரது வீட்டில் 30க்கும் மேல் நாய்களை வளர்த்து வருவதாகவும், இந்த நாய்கள் குரைப்பது, ஊளையிடுவதால் தொந்தரவு உள்ளதாகவும், நாய்களிடம் இருந்து நெடி வீசுவதால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்றும், கோவை ஆர்.டி.ஓ.,விடம், டாக்டர் ஜெயவர்த்தவாவேலு, பதி, குமாரவேல் புகார் அளித்தனர். இதையடுத்து பொது நலன் கருதி, அந்த வீட்டில் உள்ள நாய்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என, ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். மேலும், குடியிருப்புப் பகுதியில் நாய்களை வளர்க்க, என்.ஓ.சி., வழங்கப்படவில்லை என்றும், வர்த்தக நோக்கில் அங்கு நாய்கள் வளர்க்கப்படுகிறது என்றும், அந்த உத்தரவில் கூறப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் விக்ரம் மனு தாக்கல் செய்தார். இவரது சார்பில் ஆஜரான வக்கீல் பால் கனகராஜ், “நாய்கள் செல்லப் பிராணி என்பதால், அவைகளை வீட்டில் வளர்ப்பது, பொது மக்களுக்கு தொந்தரவு தருவதாக கூற முடியாது’ என்றார். புகார் கொடுத்தவர்கள் சார்பில், சீனியர் வக்கீல்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், அரசு வக்கீல் குமணன் ஆஜராகினர்.
மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன் பிறப்பித்த உத்தரவு: நாய்களை வைத்திருக்க, கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டப்படி, உரிய அதிகாரிகளிடம் உரிமத்தை மனுதாரர் பெறவில்லை. செல்லப் பிராணிகளாக இந்த நாய்களை மனுதாரர் வைத்திருக்கவில்லை. வர்த்தக நோக்கில் இதை வைத்துள்ளார். பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் செயலை அகற்றுவதற்கு, ஆர்.டி.ஓ.,வுக்கு அதிகாரம் உள்ளது. குடியிருப்புப் பகுதியில் வளர்க்கப்படும் நாய்கள் குரைப்பதாலும், ஊளையிடுவதாலும் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும். எனவே, ஆர்.டி.ஓ., எடுத்த நடவடிக்கையை சட்டவிரோத செயல் என கூற முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, நாய்கள் குரைப்பது, ஊளையிடுவதால் அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு அசவுகரியம், இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நாய்களிடம் இருந்து வீசும் நெடி, பொது மக்களுக்கு அசவுகரியத்தையும், தொந்தரவையும் விளைவிக்கிறது. எனவே, பொது மக்களுக்கு தொல்லை ஏற்படும் விதத்தில், குடியிருப்புப் பகுதியில் நாய்கள் மற்றும் இதர பிராணிகளை வளர்க்க, யாருக்கும் உரிமையில்லை. அப்படி தொல்லை விளைவித்தால், அதை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. குடியிருப்புப் பகுதியில் நாய்கள் குரைப்பது, ஊளையிடுவதால் அப்பகுதியில், சுமுகமான சூழ்நிலைக்கு பாதிப்பு ஏற்படும். அத்தகைய தொல்லைகளை அகற்ற வேண்டிய கடமை, நகராட்சி அதிகாரிகளுக்கு உள்ளது. எனவே, கோவை ஆர்.டி.ஓ., பிறப்பித்த உத்தரவில் தவறில்லை. அதில் குறுக்கிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தமிழ்வாணன் உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply