சென்னை: தமிழக தொழில்துறையின் முழுமையான வழிகாட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தை, துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழகம் முன்னிலையில் இருந்து வருகிறது. 2006 மே முதல் இதுவரை தமிழகத்தில் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் உற்பத்தி தொழில்களில் வந்துள்ளன. இதன் மூலம், 2.20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியிருக்கிறது.
தொழில்துறையின் கீழ் இயங்கும் அமைப்புகளான டிட்கோ, வழிகாட்டி நிறுவனம், சிப்காட் ஆகியவை தனித்தனியே இணையதளம் மூலம் முதலீட்டாளர்களுக்கு தகவல்களை வழங்குகின்றன.இந்நிலையில், முதலீட்டாளர்களுக்குத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் ஒரே இணைய தளத்தின் மூலம் வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது.இதற்கேற்ப தயாரிக்கப்பட்ட புதிய இணையதளத்தை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
www.investingintamilnadu.comஎன்ற இந்த இணையதளத்தை, தொழில்துறை வழிகாட்டி நிறுவனம் வடிவமைத்துள்ளது.இதில், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தமிழகத்தில் உள்ள முதலீடு வாய்ப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். தமிழக அரசு, இவர்களுக்கு செய்து தரும் வசதிகளைப் பற்றியும், இதில் அறிந்து கொள்ள முடியும்.தமிழகத்தில் தொழில் துவங்கத் தேவைப்படும் அனைத்து விவரங்களையும் மிக எளிமையாக பார்த்து புரிந்து கொள்ளும் வகையில், இணையதளத்தில் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் பூங்காக்களும், “கூகுள் மேப்ஸ்’ மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
தொழில் துறை வழிகாட்டு மையத்தின் அதிகாரிகளுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இணையதளம் மூலம் நேரடியாக உரையாடக் கூடிய, “லைவ் சாட்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் வழியே, ஒற்றைச் சாளர தீர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பங்களின் தற்போதைய நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும்.மேலும், தமிழகத்தில் முதலீடு செய்துள்ள முன்னணி நிறுவனங்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் “வீடியோ’ காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
Leave a Reply