தேனி:விபத்தில் இரு கால்களும் செயல் இழந்த வாலிபர், நல வாரியத்தில் பதிவு செய்தும் உதவித் தொகை பெற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.
தேனி, பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி, கலியநாயக்கர் தெருவை சேர்ந்தவர் ஜெயபாண்டி(33). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. மனைவி பாண்டியம்மாள், மகன் கருப்பசாமி(10), மகள்கள் சுகன்யா(8), கோபிகா(6) ஆகியோருடன் வசித்து வருகிறார். ஆண்டிபட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் மகராஜன் தோட்டத்தில் ஜூலை 30 ல் தேங்காய் வெட்டிய போது ஜெயபாண்டி மரத்தில் இருந்து தவறி விழுந்தார்.
முதுகெலும்பில் மூன்று இடங்களில் முறிவு ஏற்பட்டு மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இரு கால்களும் செயல் இழந்த நிலையில் தற்போது வீட்டில் படுத்த படுக்கையாகிவிட்ட ஜெயபாண்டி கடன் வாங்கியும், இருந்த நகைகளை விற்றும் மருத்துவ செலவு செய்தார். தற்போது எந்த உதவியும் இல்லாததால் குடும்பம் நடத்தவே கஷ்டப்படுகிறார். மனைவி பாண்டியம்மாள், தேங்காய் சுமக்கும் தொழிலுக்கு போய் வருகிறார்.தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டத்தில் ஜெயபாண்டி உறுப்பினராக சேர்ந்து அடையாள அட்டை பெற்றுள்ளார். நல வாரிய உறுப்பினர் என்ற முறையில் இரு கால்களும் செயல் இழந்தவர்களுக்கு அரசின் ஒரு லட்சம் ரூபாய் உதவிதொகை கூட இவருக்கு வழங்கப்படவில்லை.
பெரியகுளம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாருக்கு விண்ணப்பித்தும் பலனில்லை. இதையடுத்து செப்.,7 ல் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் முத்துவீரனிடம் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தார். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. குறைந்த பட்சம் விசாரணை கூட நடத்தவில்லை.ஜெயபாண்டி கூறியதாவது: நான் விவசாய தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளேன். சம்பாதித்த பணத்தை எல்லாம் மருத்துவத்துக்கு செலவழித்து விட்டு குடும்பமே கஷ்டப்படுகிறோம். நலவாரிய திட்டத்தின் கீழ் உதவியை எதிர்பார்த்ததில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதிகாரிகள் மனதுவைத்து உதவவேண்டும், என்றார்.
Leave a Reply