நெல்லை : திருச்செந்தூர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா செய்வதற்கு நெல்லை ஓட்டல்களில் சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நெல்லை போலீசார் ஓட்டல் அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 40 லட்சம் ரூபாய் சிக்கியது.
நெல்லை மாநகர போலீஸ் துணை ஆணையர் மாணிக்கராவ் தலைமையில் போலீசார் நேற்று நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சில அறைகளில் சோதனை நடத்தினர். சுற்றுலா வளர்ச்சிக்கழகத்திற்கு சொந்தமான அந்த ஓட்டலை முன்னாள் அமைச்சர் ஒருவரின் நெருக்கமான ஒருவர் லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். அங்கு பூட்டியிருந்த 2 அறைகளில் பணம் இருப்பதாக தெரியவந்ததால், பூட்டை உடைக்க போலீசார் முயன்றனர். ஓட்டல் வக்கீல் ஏ.கே.செல்வக்குமார் தலைமையில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், அறையை திறந்து சோதனை செய்த போது, ஒரு அறையில் 31 லட்சத்து 32800 ரூபாயும், மற்றொரு அறையில் ஒரு லட்சத்து 19000 ரூபாயும் சிக்கியது.
இதையடுத்து, அறைகளில் தங்கியிருந்த ஊத்துமலை அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணிய பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்த அப்பாத்துரை, ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரித்தனர். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருவதாகவும், நான்குநேரி அருகே ஒரு நிலத்தை வாங்க பணத்தை வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர். மாநகர துணை ஆணையர் அவினாஷ்குமார் தலைமையில் மற்றொரு குழுவினர் மதுரை சாலையிலுள்ள ஒரு ஓட்டல் அறையில் சோதனை நடத்தினர். இதில் ரூ.7.5 லட்சம் சிக்கியதாக கூறப்படுகிறது. அங்கு நின்ற ஒரு காரை பறிமுதல் செய்தனர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் கருப்பையா, மதுரை புறநகர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் சந்திரன் மற்றும் திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் டிரைவர் சதீஷ்குமாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்யவே அதிமுகவினர் நெல்லையில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
Leave a Reply