சென்னை : பள்ளிப் படிப்பு படிக்காமல், திறந்தவெளி பல்கலை மூலம் எம்.ஏ., படித்து, பின் சட்டப் படிப்பு முடித்த 100 வக்கீல்களின் பதிவை, தமிழ்நாடு பார் கவுன்சில் ரத்து செய்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆயிரம் வரை எட்டும் எனக் கூறப்படுகிறது.
பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு முடிக்காமல், திறந்தவெளி பல்கலை மூலம் நேரடியாக எம்.ஏ., தேர்வு எழுதலாம் என இருந்தது. இவ்வாறு திறந்தவெளி பல்கலை மூலம் நேரடியாக எம்.ஏ., பட்டம் பெற்றது செல்லாது என, நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே.கே.சசிதரன் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட் பிறப் பித்த உத்தரவு செல்லும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, திறந்தவெளி பல்கலை மூலம் நேரடியாக எம்.ஏ., பட்டம் பெற்று, அதன் பின் சட்டப் படிப்பு முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்களின் விவரங்களை, தமிழ்நாடு பார் கவுன்சில் ஆராய்ந்தது. பார் கவுன்சில் உறுப்பினர் பதிவுக் குழுவின் தலைவர் செல்வம் தலைமையில் உறுப்பினர்கள் வரதன், வெங்கடேசன் அடங்கிய குழு, இப்பிரச்னையை ஆராய்ந்தது.
மூன்றாண்டு பி.எல்., படிப் பில் சேர, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். ஐந்தாண்டு பி.எல்., படிப்பில் சேர, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். திறந்தவெளி பல்கலையில் நேரடியாக எம்.ஏ., பட்டம் பெற்றவர்கள், அந்த எம்.ஏ., படிப்பை வைத்து சட்டப் படிப்பு முடித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்து பிராக்டீஸ் செய்து வருகின்றனர். இவ்வாறு பட்டப் படிப்பு படிக்காமல், திறந்தவெளி பல்கலை மூலம் நேரடியாக எம்.ஏ., பட்டம் செல்லாது என, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து விட்டதால், இந்த எம்.ஏ., பட்டத்தை தகுதியாக கொண்டு, சட்டப் படிப்பு முடித்ததும் செல்லாது என, பார் கவுன்சில் முடிவெடுத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பரிசீலனை செய்ததில், நேரடியாக எம்.ஏ., பட்டம் பெற்று, பின் சட்டப்படிப்பு முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்த 100 வக்கீல்களை, பார் கவுன்சிலில் இருந்து நீக்கியுள்ளனர். இதற்கான தகவல், சம்பந்தப்பட்டவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து, வக்கீல்கள் பதிவுக்கான குழுவின் தலைவர் செல்வம் கூறும்போது, “”திறந்தவெளி பல்கலை மூலம் நேரடியாக எம்.ஏ., பட்டம் பெற்று, அதன்பின் சட்டப் படிப்பு முடித்த 34 பேர், வக்கீலாக பதிவு செய்ய விண்ணப்பம் அளித்தனர். அதை நிராகரித்து விட்டோம். ஓராண்டுக்கு மட்டுமே தற்போது விவரங்கள் எடுக்கப்பட்டு 100 பேர் நீக்கப்பட்டுள்ளனர். பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்களின் விவரங்களை ஒவ்வொரு ஆண்டாக பரிசீலிக்க உள்ளோம். திறந்தவெளி பல்கலை துவங்கப்பட்டு, முதலாவதாக எம்.ஏ., பட்டம் வழங்கிய ஆண்டில் இருந்து, பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்களின் விவரங்களை பரிசீலித்தால் போதுமானது,” என்றார். ஒவ்வொரு ஆண்டும், வக்கீல்களின் பதிவை பரிசீலித்தால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு ரத்தாகும் என கூறப்படுகிறது.
Leave a Reply