லண்டன்: மேல் படிப்புக்காகஇங்கிலாந்து செல்லும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள், தங்கள் படிப்பு, தங்குமிடம், உணவு இவற்றை சமாளிக்க போதுமான பணம் கிடைக்காததால் எப்படியாவது பிழைக்க வேண்டும் என்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இங்கிலாந்தில் இந்தியமாணவர்கள் படிப்புக்குச் செல்வது குறித்து பி.பி.சி., ஓர் ஆவணப் படம் தயாரித்துள்ளது. அதில் அவர்கள் தங்கள் அத்தியாவசிய செலவுகளுக்காகக் கூட திண்டாடக் கூடிய நிலையில் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. பகுதிநேர வேலை கிடைக்கும் என்ற கருத்தில் சென்ற இவர்கள் பாதிப்படைந்து விட்டனர்.
இங்கிலாந்தில் பகுதி நேர வேலை பார்த்தால் அதில் வரும் வருமானத்தை வைத்தே, படிப்பு உள்ளிட்ட இதரச் செலவுகளைச் சமாளிக்கலாம் என்றுஏஜன்ட்கள் பொய்த்தகவல்களைக் கூறி அனுப்பி விடுகின்றனர்.ஆனால், அங்கு நிலைமை நேர்மாறாக இருக்கிறது. பெரும்பாலும் வேலை கிடைப்பதில்லை. இதனால், வாடகை கொடுத்து அறைகள் எடுக்க இயலாத இந்திய மாணவர்கள்,”சவுத்ஆல்’ என்ற பகுதியில் உள்ள ஸ்ரீகுரு சிங் சபா என்ற குருத்வாராவில் தங்கிக் கொள்கின்றனர். அங்கு இலவசமாக உணவு வழங்கப்படுவதால் மாணவர்கள் கூட்டமாக உணவு வழங்கும் நேரத்தில் சென்று விடுகின்றனர். இவ்வளவு கஷ்டங்களுடன், கடன் சுமையுடன் இந்தியா திரும்பினால் சொந்தக்காரர்கள் மத்தியில் கவுரவக் குறைச்சல் என்பதால் அவர்கள் இந்தியாவுக்கும் திரும்பி வருவதில்லை.நிதின் வாலியா என்ற மாணவர் இது பற்றி கூறியதாவது:என்னால் வாடகைக்கு அறை எடுக்க முடியவில்லை. என் சொந்தக்காரர்களிடம் கடன் வாங்கியுள்ளேன். அதை பஸ் கட்டணத்துக்கு பயன்படுத்துகின்றேன். இந்நிலைமையில் இந்தியாவுக்குத் திரும்புவது குறித்து என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. மாணவர் விசாவுக்காக 48 ஆயிரமும், கல்லூரிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்காக இருந்த இரண்டு லட்ச ரூபாயும் செலவு செய்துவிட்டேன்.
என் பெற்றோரின் மொத்த சேமிப்பு, சொந்தக்காரர்களிடம் வாங்கிய கடன் இவற்றால் தான் என்னால் இவ்வளவாவது சமாளிக்க முடிந்தது.இன்டர்நெட்டில் நான் படிக்கப் போகும் கல்லூரி பெரிய வளாகத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் நேரில் பார்த்தால், ஒரே ஒரு கட்டடம், தீப்பெட்டி போல வகுப்பறைகள். நான் ஏமாற்றப்பட்டு விட்டேன். இந்தியாவிலேயே நல்ல கல்லூரிகளை நாம் காண முடியும்.இவ்வாறு, நிதின் தெரிவித்தார்.ஸ்ரீகுருசிங் சபாவின் தலைவர் திதர் சிங் ரந்தாவா கூறியதாவது : நம் மாணவர்கள் நூற்றுக்கணக்கில் தெருக்களில் திரிவதை நான் பார்க்கிறேன். நிறைய பேர் உணவுக்காக இங்கு வருகின்றனர். சந்தோஷமாக அவர்களுக்கு உணவு வழங்குகின்றோம். ஆனால், தங்குவதற்கு இடம் கேட்கின்றனர்.
ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் தங்குவதற்குரிய ஏற்பாடு செய்கின்றோம். நீண்டநாள் தங்க வைக்க இயலாது. தங்களைத் திருப்பி அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யும்படி சில மாணவர்கள் எங்களிடம் கெஞ்சுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.தொழில் மேலாண்மைமாணவரான ரவிசிங் என்பவர் கூறுகையில், “இந்தியாவிலுள்ள ஏஜென்ட்டுகள், இங்கிலாந்தில் பகுதி நேர வேலை கிடைக்கும் என்று கூறி அனுப்பி விடுகின்றனர். ஆனால், இங்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை’ என்று தெரிவித்தார்.
Leave a Reply