சென்னை:””பள்ளி அளவிலேயே, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை பற்றிய பாடம் இடம்பெற வேண்டும்,” என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.சாலை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற போக்குவரத்து மேலாண்மை பற்றிய தேசிய கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.
அப்போது, தமிழக காவல்துறையின் 150வது ஆண்டை குறிக்கும் வகையில், தபால் தலை வெளியிடப்பட்டது. தபால் தலையை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். தபால் துறை தலைமை மேலாளர் சக்கரவர்த்தி பேசும்போது, “”இதுபோன்ற தபால் தலைகளை வெளியிட இரண்டு ஆண்டுகள் ஆகும். ஆனால், இதில் முதல்வர் தனிக் கவனம் எடுத்து, ஆர்வம் காட்டியதால் ஆறு, ஏழு மாதங்களில் தபால் தலை வெளியிட முடிவானது.
தபால் தலை இரண்டு வண்ணங்களில் தான் இருக்கும். ஆனால், இந்த தபால் தலை பல வண்ணங்களில் இடம்பெற்றுள்ளது,” என்றார்.கருத்தரங்கை துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:நமது நாட்டில், பயங்கரவாதத்தைவிட சாலை விபத்தில் தான் அதிகம் பேர் இறக்கின்றனர். நகர்ப்புறங்களில் இது மிகப் பெரிய அபாயமாக உள்ளது. தமிழக காவல்துறை துவக்கப்பட்டு, 150 ஆண்டு முடிகிறது. தமிழக போலீசின் 150 ஆண்டுகால வரலாற்றில், தி.மு.க., அரசின் முக்கிய சாதனைகள் எல்லாம் மைல் கற்கள்.தமிழக அரசு, நகர்ப்புற போக்குவரத்து மேலாண்மைக்கு அதிக முன்னுரிமை அளித்து வந்துள்ளது. பெரிய நகரங்களில், சாலைகளில் தூங்கும் வீடு இல்லாத மக்கள் அதிகம் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வளரும் நகரங்களுக்கு எந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை வகுத்தாலும், இந்த மக்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.சாலையின் நீளம் அதிகரித்துக் கொண்டிருந்தாலும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, மற்றொரு கவலைக்குரிய விஷயம். உதாரணமாக, சென்னை நகரில், கடந்த 15 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்துள்ளது. நம் நாட்டில் மணிக்கு 13 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர் என்பதையும், உலகிலேயே உயிரிழப்பு விகிதம் அதிகம் உள்ள நாடு இந்தியா என்பதையும் அறியும் போது, மனம் வலிக்கிறது.
சாலை விபத்துக்களின் போது, “தங்கமான நேரம்’ எனப்படும் விபத்து நடந்த ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய, “இ.எம்.எஸ்.,’ சேவையை கடந்த ஆண்டு துவக்கி வைத்தேன். இந்த சேவையில், அதிகளவாக 32 சதவீத தொலைபேசி அழைப்புகள், சாலை விபத்துக்கள் தொடர்புடையவை.சாலை பாதுகாப்பும், போக்குவரத்து மேலாண்மையும், பள்ளி அளவிலேயே பாடமாக இடம்பெற வேண்டியது அவசியம். சிறப்பு விளையாட்டுக்களை உருவாக்கியும், ஓய்வு நேர செயல்பாடுகளின் போதும், சாலை பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் பற்றி குழந்தைகளை உணரச் செய்ய, விசேஷ விளையாட்டுக்களை உருவாக்க வேண்டும்.
சாலையில் உள்ள போலீசார் தான் மாநிலத்தின் அதிகாரி என்ற அளவில் மட்டும் தனது பணியை நிறுத்திக் கொள்ளக் கூடாது. சாலையை பயன்படுத்துவோரின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு, “பிரச்னை தீர்ப்பவர்’ என்ற பொறுப்பும் தனது பணியே என உணர வேண்டும். போக்குவரத்து பிரச்னையை தீர்ப்பதில் அவர்களையும் ஈடுபடுத்தி, ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார். கருத்தரங்கில், அனைத்து மாநிலங்களில் இருந்தும் போக்குவரத்துத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் டி.ஜி.பி., அல்லது கூடுதல் டி.ஜி.பி., அந்தஸ்திலான அதிகாரிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கு ஏற்பாடுகளை, டி.ஜி.பி., லத்திகா சரண் மேற்கொண்டிருந்தார்.
Leave a Reply