பாட்னா : “நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எங்கள் பள்ளிகளை குண்டு வைத்து தகர்த்து, எங்கள் எதிர்காலத்தை இருள் மூடச் செய்துவிடாதீர்கள்’ என்று பள்ளிக் குழந்தைகள், மாவோயிஸ்ட்களுக்கு மனமுருக்க ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர்.
பீகார் மாநிலத்தில், மாவோயிஸ்ட்கள் தொடர்ந்து தங்கள் நாசகார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே தண்டவாளங்கள், மொபைல் போன் கோபுரங்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள், சாலைகள் இவற்றை குண்டு வைத்துத் தகர்த்து வந்த அவர்கள், இப்போது அரசு பள்ளிக் கட்டடங்களை குண்டு வைத்து சிதைக்கத் துவங்கியுள்ளனர்.
அவுரங்காபாத், கயா, ரொட்டாஸ், ஜெகனாபாத், முங்கர் மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 20 பள்ளிகளை குண்டு வைத்துத் தகர்த்துள்ளனர். இப்படி தகர்க்கப்படுபவை அரசுப் பள்ளிகள் மட்டுமே. பாதுகாப்புப் படையினர் அப்பள்ளிகளை தாங்கள் பதுங்குவதற்கு மறைவிடமாகப் பயன்படுத்துவதாக மாவோயிஸ்ட்கள் கருதுவதால், அவற்றின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் அனைவரும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் இருந்து வருபவர்களே. தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால், அங்கு செல்லாமல் அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர்.இந்நிலையில், அவுரங்காபாத் பள்ளிக் குழந்தைகள் சமீபத்தில் மாவோயிஸ்ட்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:மாவோயிஸ்ட் அங்கிள்! எங்கள் பள்ளிகளை எதற்காக குறிவைக்கிறீர்கள்? நாங்கள் என்ன பாவம் செய்தோம்? போலீசாருடன் உங்களுக்கு பல பிரச்னைகள் இருக்கலாம். அதற்காக எங்கள் மீது ஏன் கோபம் கொள்கிறீர்கள்? எங்கள் மீது கருணை காட்டுங்கள். எங்கள் பள்ளிகளைத் தாக்காதீர்கள். எங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பாழாக்கி விடாதீர்கள்.இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.மாவோயிஸ்ட்களின் தாக்குதல்களைத் தடுக்காமல், கிராம மக்களிடம் அங்கிருந்து வெளியேறி விடும்படி பாதுகாப்புப் படையினர் கூறி வருகின்றனர். மாவோ தாக்குதல் நடக்காமல் இருக்க, அரசும் எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. இதனால் தான் வெறுத்துப் போய், மாவோயிஸ்ட்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்து, உருக்கமாக கடிதம் எழுதியுள்ளனர்.
Leave a Reply