காத்மாண்டு: புவிவெப்பம் குறித்த விழிப்புணர்வுக்காக நேபாள நாட்டு அமைச்சரவைக் கூட்டம் இன்று எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் நடைபெறுகிறது. இதற்காக அங்கு நேபாள அமைச்சர்கள் திரண்டுள்ளனர்.
புவிவெப்பத்தால் இமயமலைக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்து மக்களுக்கும், உலகுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த வித்தியாசமான அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலாபத்தார் என்ற இடத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த இடம் தரைமட்டத்திலிருந்து 5165 மீட்டர் உயரத்தில் உள்ளது.
27 பேர் கொண்ட நேபாள அமைச்சர்களில் பலரும் நேற்றே வந்து விட்டனர். சிலரது உடல் நிலை இவ்வளவு உயரமான பனிமலைப் பகுதிக்குச் செல்லும் வகையில் இல்லாததால் டாக்டர்கள் அறிவுரைப்படி அவர்கள் மட்டும் போகவில்லை.
புவிவெப்பம் காரணமாக, இமயமலையின் மிகப் பெரிய பனி ஆறுகள், உருகி பேரபாயம் காத்திருப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். எனவே புவிவெப்பத்தால் இமயமலைக்கு பெரும் ஆபத்தும், அதனால் அப்பிராந்தியம் பெரும் ஆபத்தை சந்திக்கும் நிலையில் இருப்பதும் நேபாள மக்களை மட்டுமல்லாமல் உலக மக்களையும் கூட கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில்தான் புவிவெப்ப மாற்றம் குறித்த விழிப்புணர்வுக்காக இன்றைய அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதே காரணம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த கடலுக்கடியில் மாலத்தீவு நாட்டு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது நினைவுகூறத்தக்கது
Leave a Reply