புதுடில்லி: “”உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால் விலைவாசி உயர்ந்துள்ளது. இதை சமாளிக்க வேண்டும் என்றால், பொது வினியோகத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் தான், சாதாரண மக்கள் நிவாரணம் பெற முடியும்,” என, அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
பார்லிமென்டில் நேற்று நடந்த விவாதத்தின் போது, உணவுப் பொருட்களின் கடுமையான விலையேற்றம் குறித்து கவலை தெரிவித்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கூறினார். அவர் மேலும் பேசியதாவது:
சாதாரண மக்களை பாதிக்கக் கூடிய அளவுக்கு விலைவாசி அதிகரித்துள்ளது கவலைக்குரியது. பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையே விலைவாசி அதிகரிக்க காரணம்.பருப்பு வகைகளை விளைவிக்கும் நாடுகள் மிகக் குறைவு. பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் விளையும் பருப்பு வகைகள், அந்நாட்டிற்கே போதுமானதாக உள்ளதால், அங்கிருந்து நாம் பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் உள்ளோம். பருப்பு வகைகளின் உற்பத்தி குறைந்துள்ளதால், நமக்கு இப்போது 36 லட்சம் டன் பருப்பு தேவை.உணவுப் பொருட்களின் இந்தத் தட்டுப்பாட்டுக்கு உற்பத்தி மற்றும் தேவை இடையே ஏற்பட்டுள்ள வேறுபாடே காரணம். பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு சாத்தியமான பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
சர்க்கரைப் பற்றாக்குறை ஏற்படுமானால், கச்சா சர்க்கரை இறக்குமதி செய்யப்படும். அரிசி, பருப்பு, சர்க்கரை இவற்றின் இருப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் கோதுமை, பருப்பு, மக்காச்சோளம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பொது வினியோகத் திட்டத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். அதன் மூலம்தான் சமுதாயத்தின் அடிமட்டத்திலுள்ள மக்களுக்கு குறிப்பாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்.உணவுப் பொருட்களை பதுக்கி வைப்பவர்கள், கொள்ளை லாபத்துக்கு விற்பவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டை நீக்குவதற்குரிய நீண்டகால தீர்வு குறித்து வேளாண் விஞ்ஞானிகளுடன் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை, 10 சதவீதத்திற்கு மேல் இருக்காது.இவ்வாறு பிரணாப் தெரிவித்தார்.
Leave a Reply