சென்னை : போலி மருந்து தயாரிப்பவர்கள் பற்றி தகவல் தருவோருக்கு, 25 லட்சம் ரூபாய் வரை ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போலி மருந்துகள் மற்றும் கலப்பட மருந்துகளை கட்டுப்படுத்த, மத்திய அரசின் மருந்துகள் மற்றும் அழகு சாதனச் சட்டத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் சில மாறுதல்கள் கொண்டு வரப்பட்டது.
கலப்பட அல்லது போலி மருந்துகளை விற்பனைக்காக உற்பத்தி செய்வது மற்றும் விற்பதன் மூலம் ஒருவருக்கு மரணமோ, கொடுங்காயமோ ஏற்பட்டால், அத்தகைய மருந்து தயாரிப்பாளருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு குறையாமலும், அதிகபட்சம் ஆயுட்கால தண்டனையும் வழங்கப்படும். தண்டனையுடன் குறைந்தபட்சமாக 10 லட்சம் ரூபாய் அல்லது கைப்பற்றப்பட்ட மருந்துகளின் மதிப்பில் மூன்று மடங்கு, இதில் எது அதிகமோ அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்படும். இதுபோன்ற போலி மருந்து தயாரிப்பவர்கள் பற்றிய விவரங்களுடன், தகவல் தருவோருக்கு ஊக்கத் தொகை வழங்க மத்திய அரசு ஒரு முறையை கடைபிடிக்க உள்ளது. இந்த ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், மருந்துகள் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றி தகவல் தருவோருக்கு மட்டுமே பொருந்தும். இந்த ஊக்கத் தொகை, கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பில் அதிகபட்சமாக 20 சதவீதம் அல்லது 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் ஒவ்வொரு தகவலுக்கும் வழங்கப்படும்.
மத்திய மாநில அரசுகளின் கீழ் இயங்கும் மருந்துக் கட்டுப்பாடு துறையினருக்கோ அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கோ, போலி மருந்துகள் பற்றிய தகவல்களைக் கொடுக்க, தகவல் தெரிவிப்பவர்கள் www.cdsco.nic.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
Leave a Reply