வந்தவாசி: தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் நிச்சயம் கூட்டணி வைக்கத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
இதன்மூலம், கூட்டணி வைத்தவர்களை எல்லாம் இதுவரை திட்டித் திட்டியே அரசியல் நடத்திக் கொண்டிருந்த விஜய்காந்த்தும் கூட்டணிக் குளத்தில் குதி்க்கவுள்ளார்.
வந்தவாசி இடைத் தேர்தல் தேமுதிக வேட்பாளர் ஜனார்த்தனனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அவர் பேசுகையில்,
ஜெயலலிதா 2 முறையும், கருணாநிதி 5 முறையும் ஆட்சி செய்து தமிழக மக்களுக்கு என்ன செய்து விட்டார்கள்?. ஒன்றும் செய்யவில்லை.
நம்முடைய பணத்தில்தான் நமக்கு இலவச கலர் டிவி தருகிறார்கள். காஸ் அடுப்பு தருகிறார்கள். அவர்கள் வீட்டுப் பணத்தை தரவில்லை.
கிராமத்துச் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. 62 ஆண்டுகால ஆட்சியின் லட்சணம் இதுதான்.
ராவணனை காட்டிக் கொடுத்த விபீஷணன் போல தமிழர்களை டெல்லிக்குக் காட்டிக் கொடுத்தவர் கருணாநிதி.
திமுகவை திட்டினால் என் சொத்தை அழிப்பார்கள். என் சொத்துகள் அனைத்தையும் உங்களுக்காக இழக்கவும் நான் தயாராக உள்ளேன்.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கருணாநிதி மத்திய அமைச்சரைக் கண்டித்து பொதுக்கூட்டம் என்று அறிவித்தார். உடனே இளங்கோவன் ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜாவைக் கண்டித்து ஊர் ஊராக மேடை போட்டு பேசுவேன் என்று கூறியதும் கருணாநிதி கூட்டத்தை ரத்து செய்தார்.
இப்படிப்பட்டவரால் மக்களுக்கு என்ன செய்துவிட முடியும்?
எம்.ஜி.ஆர் 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினார். அதனால் அப்போது யாராலும் ஆட்சிக்கு வர முடியவில்லை.
காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் அவர்களிடம் நீங்கள் உங்கள் தொகுதிக்கு சுகாதாரம், சாலை வசதி, கல்வி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என கேட்க முடியாது.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்றார்கள், வழங்கினார்களா இல்லையே. அதிமுகவும், திமுகவும் பல கட்சிகளுடன் கூட்டணி வைக்கின்றன. நான் மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளேன்.
தமிழக மக்களுக்காக நல்லது நடக்கவும், மக்களுக்காக போராடவும் நான் நிச்சயம் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பேன். ஆனால், யாருடன் கூட்டணி என்பதை இப்போது சொல்ல மாட்டேன். அப்போது விஜயகாந்தின் திறமை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் பாமக போல மாறி, மாறி போகமாட்டேன்.
இந்த இடைத் தேர்தலில் தேமுதிகவுக்கு வாக்களித்தால்தான் ஆட்சி செய்பவர்களுக்கு பயம் வரும். திமுகவினர் ஓட்டுக்காக ஒவ்வொருவருக்கும் ரூ.500, 1000 கண்டிப்பாக கொடுத்திருப்பார்கள். ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் என்பார்கள். அதுபோல பணத்தை பெற்றுக் கொண்டு மாற்றி வாக்களியுங்கள் என்றார்.
சிறும்பூண்டி என்ற இடத்தில், எதிரே துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தபடி வந்ததால் போலீஸார் விஜயகாந்தை தடுத்ததினர். இதனால் சினிமா பாணியில் கண்கள் சிவக்க கோபப்பட்ட விஜயகாந்த் வேனில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
Leave a Reply