மருத்துவக் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம்’

posted in: கல்வி | 0

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள மயில்வாகனன் நடராஜன் கல்விமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி:

தற்போது வழங்கப்படும் மருத்துவக் கல்வியின் தரம் எப்படி உள்ளது?
பொதுவாக காலமாற்றத்திற்கும், தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். இது மருத்துவக் கல்விக்கு மிக முக்கியம். ஆசிரியர்கள் படித்த காலத்தில் இருந்த தொழில்நுட்பத்தை மட்டுமே பாடங்களாக கொண்ட, பாடத்திட்டத்தையே தற்போதும் கற்பதில் பயனில்லை. நவீன மருத்துவ முறைகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் முதலில் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பெறப்படும் மருத்துவ பட்டம் வெளிநாடுகளில் மதிப்பில்லை என்று கூறப்படுகிறதே?
ஒரேமாதிரியான கல்வி முறை இந்தியாவில் இல்லாதது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். பிரிட்டன் போன்ற நாடுகளில் இளநிலை பட்டப்படிப்பிற்கு பிறகே, மருத்துவம் படிக்க முடியும். ஆனால், இந்தியாவில் பிளஸ் 2க்கு பிறகே மருத்துவக் கல்வி அளிக்கப்படுகிறது. இதனால், உரிய அனுபவம் இல்லாமல் இளம் பருவத்திலேயே மருத்துவக் கல்வி படிக்க வருகின்றனர். மேலும், பல்வேறுபட்ட பாடத்திட்டங்களை இந்தியா கொண்டுள்ளதால், வெளிநாட்டினர் நமது கல்வி முறையை சந்தேகிக்கின்றனர்.

கலாச்சாரம், மக்கள் வாழ்க்கை முறை போன்றவற்றைப்போல பொதுவான நோய்களிலும் மற்ற நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக இங்கு டயேரியா, டைபாய்டு போன்ற நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கால் மூட்டு தேய்மானம் இங்கு அதிகளவில் காணப்படும் நிலையில், வெளிநாடுகளில் இடுப்பு எலும்பு தேய்மானம் அதிகமாக உள்ளது. எனவே, இதற்கு ஏற்ற வகையிலான பாடத்திட்டங்களை அந்தந்த நாடுகள் கொண்டுள்ளன. இந்தியாவில் மருத்துவம் படிப்பவர்கள், இங்கு அதிகம் காணப்படும் நோய்களுக்கான சிகிச்சை முறையையே அதிகம் கற்றிருப்பர். இதுவும் ஒரு காரணம்.

மக்களுக்கு அத்தியாவசியமானதும், சேவை மனப்பான்மையோடும் செயல்பட வேண்டிய கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகள் வியாபாரமாகி வருகிறதே?
போதிய வருமானம் இல்லாமல் இத்துறைகளை திறம்பட இயக்குவதும் கடினம். அதேசமயம் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுவதும் சரியல்ல. எனவே, இத்துறைகளில் உள்ளவர்கள் இதனை ‘பேலன்ஸ்’ செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை துணைவேந்தராக நீங்கள் செய்ய விரும்பும் எதிர்கால திட்டங்கள் என்ன?
வகுப்புகள் ‘இன்டர்ஏக்டிவ்’ முறையில் மாற்றப்படும். துறை மாற்றத்திற்கு ஏற்பவும், நாட்டின் தேவைக்கு ஏற்பவும் பாடத்திட்டங்களில் தொடர் மாற்றம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். நோயாளி மற்றும் அவர்களது உறவினர்களுடன் ஒரு டாக்டர் எவ்வாறு பேச வேண்டும்; நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். இதற்காக ‘எபக்ட்டிவ் கம்யூனிகேசன்’ பாடமும் இடம்பெறும். பல்கலைக்கழக திட்டக்குழு மாற்றியைக்கப்படும். எனது எல்லைக்குட்பட்ட வரையில், சமுதாய தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு துணைவேந்தர் பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *