சென்னை: தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு, தேர்தல் நடத்தை விதிகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கக் கூடாது எனக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வக்கீல் ஆர்.பாலசுப்ரமணியன் தாக்கல் செய்த மனு: வந்தவாசி மற்றும் திருச்செந்தூர் சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடக்க உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், லோக்சபா தேர்தல் வந்தது. தேர்தலின் போது, இலவச கலர் “டிவி’, இலவச வீட்டு மனைப் பட்டா, பஸ் கட்டணம் குறைப்பு போன்ற பல அறிவிப்புகளை தி.மு.க., அரசு வெளியிட்டது.
தற்போதும், தேர்தல் கமிஷனிடம் தி.மு.க., எம்.பி., மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், முதல்வரின் கலைஞர் காப்பீட்டு திட்டத்திற்கு, தேர்தல் நடத்தை விதிகளில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இதை அனுமதித்தால், மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். இரண்டு தொகுதிகளிலும் இத்திட்டத்தை இடைத்தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைப்பதால், எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இதை அனுமதித்தால், அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி, தங்களுக்கு சாதகமாக ஓட்டுக்களை தி.மு.க., பெறும். எனவே, தேர்தல் நடத்தை விதிகளில் இருந்து, இத்திட்டத்திற்கு விதிவிலக்கு அளிக்க கூடாது என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி என்.பால்வசந்தகுமார் அடங்கிய “முதல் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது. தேர்தல் கமிஷன் சார்பில், சீனியர் வக்கீல் ஜி.ராஜகோபால் ஆஜரானார். மனு மீதான விசாரணை இன்று தொடர்கிறது.
Leave a Reply