சென்னை : “தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு, பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்க மறுத்தது தவறு’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் அவருக்கு இடம் ஒதுக்க பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகள் சைலஜா. பிளஸ் 2 படிப்பில் 1001 மதிப்பெண்கள் பெற்றார். கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்குபவர். தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்கக் கோரியிருந்தார்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு, கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்களை அளித்தார். கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அல்லது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் நடக்கும் போட்டிகள் தான் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சைலஜா தாக்கல் செய்த சான்றிதழ் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, சென்னை ஐகோர்ட்டில் சைலஜா சார்பில் அவரது தந்தை மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது: அலகாபாத்தில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் நான் கலந்து கொண்டேன். இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் இதை நடத்தியது. வெற்றியடைந்ததற்கான சான்றிதழ் பெற்றேன். 2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன், இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் இணைந்து விட்டது. எனவே, தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற முடியவில்லை.
இருந்தாலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் இருந்து சான்றிதழ் பெற்றேன். இந்த சங்கம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணைப்பு பெற்றது. இந்த சான்றிதழை, மாணவர்கள் சேர்க்கைக்கான துறை, ஏற்க மறுக்கிறது. எனவே,எனது சான்றிதழை பரிசீலித்து, பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை நீதிபதி சந்துரு விசாரித்தார். மனுதாரர் சார்பில், வக்கீல் வி. மீனாட்சிசுந்தரம் வாதாடினார். நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: பொறியியல் படிப்புக்கு சைலஜாவை பரிசீலிக்க தகுதியில்லை என கூற முடியாது. அவர் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் இணைந்ததால், அவரால் குறிப்பிட்ட சான்றிதழை பெற முடியவில்லை. இருந்தாலும், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சான்றிதழ் அளித்துள்ளது.
எனவே, பொறியியல் படிப்பில் சைலஜாவுக்கு அனுமதியளிக்க மறுக்க முடியாது. தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டதால், அவருக்கு முழுமையான மதிப்பெண் அளித்திருக்க வேண்டும். தற்போது மாணவர்கள் சேர்க்கை முடிந்து விட்டாலும், அதை முகாந்திரமாக கொண்டு இடம் வழங்க மறுக்கக் கூடாது.
விளையாட்டு போட்டிகளையும், விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்க தான் சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே, சைலஜாவுக்கு இடம் ஒதுக்க மறுத்தது தவறு. தேசிய அளவிலான போட்டியில் சைலஜா கலந்து கொண்டதால், அவருக்கு முழுமையான மதிப்பெண்ணை வழங்கி, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், இடம் ஒதுக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்குள் இந்த நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply