டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் வரும்கிற 6ம் தேதி ரஷ்யா செல்கிறார். அப்போது கூடங்குளத்தில் மேலும் நான்கு புதிய அணு உலைகள் அமைப்பது குறித்து ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று வந்தார் பிரதமர் மன்மோகன் சிங். இந்த நிலையில் அடுத்து 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரஷ்யா செல்லவுள்ளார்.
இந்திய- ரஷ்ய வருடாந்திர மாநாட்டி்ல அவர் பங்கேற்கும் அவர் 7ம் தேதி கிரெம்ளின் மாளிகையில், அதிபர் டிமிட்ரி மெத்வதேவை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, தீவிரவாத ஒழிப்பு, உலக விவகாரங்கள், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
அப்போது இந்தியா-ரஷ்யா இடையே நீண்டகால ராணுவ ஒத்துழைப்பு உட்பட ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
தமிழ்நாட்டில் ரஷ்ய உதவியோடு கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தில் மேலும் 4 அணு உலைகளை அமைக்க ரஷ்யா உதவி செய்யவுள்ளது. இது தவிர இரண்டு இலகு நீர் ரியாக்டர்களையும் ரஷ்யா அமைத்து தர உள்ளது. அது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன.
அதன் தொடர்ச்சியாக, பிரதமர் விளாடிமிர் புடினை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து, ரஷியாவில் இந்திய ஆண்டு நிறைவு விழாவில் மன்மோகன் சிங் பங்கேற்கிறார். அதற்காக, மாஸ்கோவில் உள்ள போல்சாய் தியேட்டரில் வண்ணமிகு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர ரஷ்யா மற்றும் இந்திய தொழிலதிபர்கள் கவுன்சில் கூட்டமும் நடைபெறுகிறது. அந்த கூட்டு கூட்டத்துக்கு ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் ரஷ்ய தொழிலதிபர் விளாடிமிர் எவ்துஷன்கோவ் ஆகியோர் தலைமையேற்கின்றனர்.
Leave a Reply