புதுடில்லி: “”நக்சலைட்கள் வன்முறையைக் கைவிடும் வரை, அவர்களுடன் பேச்சு இல்லை,” என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த சிதம்பரம் கூறியதாவது:
நக்சலைட்களுடன் பேச்சு நடத்த நான் சம்மதம் தெரிவித்துள்ளேன். ஆனால், அதற்கு முன்னர் அவர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும். இல்லையெனில், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை. வளர்ச்சி, உள்கட்டமைப்பு, அரசாட்சி உட்பட எந்த விஷயம் குறித்தும், அவர்களுடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். நக்சலைட்களுடன் பேச்சு நடத்த தாங்கள் ஏற்பாடு செய்வதாக, சில சங்கங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், உறுதியான முன்மொழிவுகள் எதுவும் இதுவரை வரவில்லை. நக்சலைட்கள் வன்முறையை கைவிட்டால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மந்திரிகள் ஆதரவா ? :நக்சலைட்களுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி செயல்படுவதாக கூறப்படுவது தவறானது. எந்த மத்திய அமைச்சரும் நக்சலைட்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் போலீசாருக்கு எதிராக குழு ஒன்றை அமைத்துள்ளனர். அந்தக் குழு அமைக்கப்பட்டது ஏன்? போலீசாருக்கு எதிராக அவர்கள் கூறும் குற்றச்சாட்டு என்ன என்பதை கேட்டறியவே, அப்பகுதிக்கு மத்திய அமைச்சர்கள் இருவர் சென்றனர். புதிதாக துவக்கப்பட்ட அந்த குழுவிற்கும், மாவோயிஸ்ட்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் நக்சலைட் எதிர்ப்பாளர்கள். இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
முன்னதாக, உள்துறை இணை அமைச்சர் அஜய் மேக்கன் கூறியதாவது: கான்ட்ராக்டர்கள் மற்றும் வர்த்தகர்களிடம் இருந்து, நக்சலைட்கள் பணம் திரட்டுகின்றனர். பாதுகாப்புப் படையினரிடம் இருந்து ஆயுதங்களை கொள்ளை அடிக்கின்றனர். அத்துடன், ரகசியமான முறையிலும் ஆயுதம் வாங்குகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) மற்றும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் அமைப்பும், 2004ம் ஆண்டில் இணைந்த பின்னர், நக்சலைட்களின் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
நாட்டில் நடைபெறும் நக்சலைட் வன்முறைகளில், 90 சதவீத வன்முறைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்பே காரணம். நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டத்தை, மத்திய அரசு துவக்கியுள்ளது. இப்பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்காக 7,300 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் விடுதிகள் கட்டவும் மத்திய அரசு மானியம் வழங்கியுள்ளது. இவ்வாறு மேக்கன் கூறினார்
Leave a Reply